வேலை வாங்கித்தருவதாக மோசடி - திருவாரூர் பாஜக மாவட்டச் செயலாளர் கைது
மாவட்ட பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கியிருப்பதாக திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
திருவாரூர் அருகே அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்த பாஜக பிரமுகரை போலீசார் கைது சிறையில் அடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த ஜாம்புவானோடை மேலக்காடு பகுதியைச்சேர்ந்தவர் ராஜேந்திரன் (54).இவர் திருவாரூர் மாவட்ட பாஜக பொதுச்செயலாளராக இருந்து வருகிறார்.இவர் முத்துப்பேட்டையை அடுத்த இடும்பாவனம் காலனி தெருவைச்சேர்ந்த அப்பாத்துரை மனைவி சாந்தி (50) என்பவரிடம் அவரது மகன் ராம்குமாருக்கு கிராம உதவியாளர் வேலை வாங்கித்தருவதாக கூறி கடந்த 2021ம் ஆண்டு முதல் பல்வேறு தவணைகளில் ரூ.2 இலட்சத்து 65 ஆயிரம் பெற்றுள்ளார்.
இந்நிலையில் பணம் வாங்கி இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் வேலையும் வாங்கித்தராமலும், வாங்கிய பணத்தை திருப்பிக்கொடுக்காமலும் ஏமாற்றிவந்துள்ளார். இது குறித்து சாந்தி ராஜேந்திரனிடம் கேட்ட போது சரியான பதில் சொல்லாமல் காலம் தாழ்த்திவந்துள்ளார். அத்துடன் ’நான் பாஜகவில் பெரிய பொறுப்பில் இருக்கிறேன். பிரச்னை செய்தால் நான் யார் என்பதை காட்டவேண்டியிருக்கும்’ என்றபடி மிரட்டியும் வந்துள்ளார்.
இதனால் மன வேதனையடைந்த சாந்தி திருவாரூர் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமாரை சந்தித்து புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட எஸ்.பி ஜெயக்குமார் இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி முத்துப்பேட்டை போலீசாருக்கு உத்தரவிட்டார்.இது குறித்து முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பாஜக பிரமுகர் ராஜேந்திரன் சாந்தியிடம் பணத்தை பெற்றுகொண்டு ஏமாற்றியது தெரியவந்தது. உடனே போலீசார் ராஜேந்திரனை கைது செய்து திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ராஜேந்திரன் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ஏமாற்றி சிறைக்கு சென்றதையடுத்து அவரை மாவட்ட பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கியிருப்பதாக திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். பாஜக பிரமுகர் மோசடி வழக்கில் கைதான சம்பவம் திருவாரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-ஆர்.விவேக் ஆனந்தன்
What's Your Reaction?