அனல் காற்று வீசுதே.. வீட்டை விட்டு வெளியே வராதீங்க.. வெப்ப மயக்கம் வருமாம்.. வானிலை மையம் அலர்ட்
தமிழ்நாட்டில் பல இடங்களில் பகல் நேரங்களில் வெப்பம் அதிகரித்து அனல் காற்று வீசி வரும் நிலையில் ஏப்ரல் 8ஆம் தேதி வரை ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
பங்குனி மாத வெயில் பட்டையை கிளப்புகிறது. தாங்க முடியலையே என்று பலரும் புழுக்கத்திற்கு தவிக்கின்றனர். பகல் நேரங்களில் அக்னி நட்சத்திர காலம் போல அனல் காற்று வீசுவதால் மக்கள் பலரும் வீடுகளை விட்டு வெளியே வரவே அச்சப்படுகின்றனர்.
வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பலரும் குளுமையான பிரதேசங்களை நாடிச் செல்கின்றனர். இளநீர், பதநீர், நுங்கு சாப்பிட்டு உடல்நிலையை பாதுகாத்துக்கொள்கின்றனர்.
தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு இன்னும் ஒருமாத காலம் உள்ள நிலையில் இப்போதிருந்தே 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெப்பம் பதிவாகி வருகிறது. வெப்பத்தை தணிக்க ஆங்காங்கே கோடை மழை பெய்தாலும் அது சில நிமிடங்கள் மட்டுமே பெய்து மக்களை ஏமாற்றமடையச் செய்கிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் வரும் 8ஆம் தேதி வரை ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும். வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில்ஒருசில இடங்களில் 106 டிகிரி, உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் 102 டிகிரி, கடலோரப் பகுதிகளில் 99 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுவதன் காரணமாக 8, 9, 10 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானமழை பெய்யக்கூடும். இதர பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அடுத்த ஐந்து தினங்களில் காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50 % ஆகவும், மற்ற நேரங்களில் 40-70 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80 % ஆகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?