சுட்டெரிக்கும் வெயில்.. இடி மின்னலுடன் மழை பெய்யுமாம்.. வானிலை மையம் கூல் அறிவிப்பு

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வெப்பம் சுட்டெரித்து வரும் நிலையில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூலான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Apr 19, 2024 - 15:08
சுட்டெரிக்கும் வெயில்.. இடி மின்னலுடன் மழை பெய்யுமாம்.. வானிலை மையம் கூல் அறிவிப்பு

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெப்ப அலை வீசத் தொடங்கியுள்ளது. அனல் காற்று வீசிவருகிறது. வெப்பநிலையானது தமிழக கடலோரப்பகுதிகளில் இயல்பை விட அதிகமாகவும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருந்தது. 

வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், அதிகபட்ச வெப்பநிலை வேலூரில் 41.5° செல்சியஸ், கரூர் பரமத்தியில் 41.0' செல்சியஸ், திருச்சியில் 40.9' செல்சியஸ், சேலத்தில் 40.8° செல்சியஸ், மதுரை (நகரம்) மற்றும் ஈரோட்டில் 40.6° செல்சியஸ் பதிவாகியுள்ளது. 

தருமபுரியில் 40.5° செல்சியஸ் மற்றும் திருத்தணியில் 40.3° செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னை நிலைமை: இதர தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 38° - 40° செல்சியஸ் பதிவாகியுள்ளது. தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34° - 38° செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 24° -30° செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 38.7° செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 37.3° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

சுட்டெரிக்கும் வெப்பத்திற்கு இடையே கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. வெப்ப நிலையை பொறுத்த அளவில், தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை அநேக இடங்களில் பொதுவாக இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக பதிவானது.

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே இன்று தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

ஏப்.21 முதல் ஏப்.23 வரை: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 24 மற்றும் 25ஆம் தேதிகளில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வெப்பநிலை எச்சரிக்கை: அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. 

நாளைய தினம் அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறையக்கூடும். அதற்கு அடுத்த மூன்று தினங்களில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் 3டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 39-42° செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34'-39° செல்சியஸ் இருக்கக்கூடும்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow