விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்.. படு நிதானம்.. 1 மணி வரை 34% பதிவு

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டசபை தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. பகல் 1 மணி நிலவரப்படி 34% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது.

Apr 19, 2024 - 14:44
விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்.. படு நிதானம்.. 1 மணி வரை 34%  பதிவு

கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் விளவங்கோடு, சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிட்ட விஜயதரணி வெற்றி பெற்றார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் பாஜகவில் இணைந்தார். இதனையடுத்து அவர் தனது எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்தார். 

இதைத் தொடர்ந்து விளவங்கோடு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. காலியாக இருந்த விளவங்கோடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள 39 தொகுதிகளிலும் நடைபெறும் மக்களவைத் தேர்தலுடன் விளவங்கோடு தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 

குழித்துறை நகராட்சி மற்றும் அருமனை, இடைக்கோடு, களியக்காவிளை உள்ளிட்ட 8 பேரூராட்சிகளை உள்ளடக்கிய இந்த தொகுதியில் 2.37 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். விளவங்கோடு தொகுதியில் 272 வாக்குச்சாவடிகள் உள்ள நிலையில், காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

காங்கிரஸ், பா.ஜ.க, அ.தி.மு.க, நாம் தமிழர் கட்சி என மொத்தம் 10 வேட்பாளர்கள் விளவங்கோடு சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் தாரகை கத்பர்ட், பா.ஜ.க சார்பில் நந்தினி, அ.தி.மு.க வேட்பாளராக ராணி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெமினி ஆகியோர் போட்டியிடுகின்றனர். 

விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர்கள், சட்டசபை இடைத்தேர்தலுக்கு மற்றும் கன்னியாகுமரி தொகுதி மக்களவைத் தொகுதிக்கு என  2 வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். வெகு நிதானமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 10.85% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. முற்பகல் 11 மணி நிலவரப்படி 17.09 சதவீத வாக்குகள் பதிவானது. தொடர்ந்து மக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். பகல் 1 மணி நிலவரப்படி விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் 34.39 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow