சிக்கலில் சிக்க வைத்த சீதா-அக்பர்.. சிங்கங்களுக்கு பேரு வச்சது குத்தமா? பறிபோன ஆஃபீசரின் வேலை..!

Feb 26, 2024 - 15:07
சிக்கலில் சிக்க வைத்த சீதா-அக்பர்.. சிங்கங்களுக்கு பேரு வச்சது குத்தமா? பறிபோன ஆஃபீசரின் வேலை..!

சிங்கங்களுக்கு அக்பர், சீதா என்று பெயர் வைத்த விவகாரத்தில் திரிபுரா மாநில முதன்மை தலைமை வனக்காவலரை அம்மாநில அரசு பணி இடைநீக்கம் செய்துள்ளது தேசிய அளவில் பேசுபொருளாகியுள்ளது.

திரிபுரா மாநிலம் செபஹிஜாலா விலங்கியல் பூங்காவில் இருந்து மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் உள்ள பெங்கால் சஃபாரி பூங்காவிற்கு கடந்த 12-ம் தேதி 2 சிங்கங்கள் கொண்டுவரப்பட்டன. வனவிலங்குகள் பரிமாற்றும் திட்டத்தின் கீழ் மேற்கு வங்கத்திற்கு கொண்டு வரப்பட்ட சிங்கங்களுக்கு, செபஹிஜாலா விலங்கியல் பூங்காவில் அக்பர், சீதா எனப் பெயரிடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து சிங்கங்களுக்கு பெயர் மாற்ற பெங்கால் சஃபாரி பூங்காவினர் பரிசீலித்து வருகின்றனர். இந்த நிலையில் சிங்கங்களுக்கு வைக்கப்பட்ட பெயர்கள் தங்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதாக இந்து அமைப்பான விஸ்வ ஹிந்து பரிஷத் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தை வழக்கு தொடுத்தது. அந்த மனுவில், இந்து மத வழக்கங்களில் சீதை தெய்வமாக கொண்டாடப்படுகிறார். ஆதலால் அக்பர்' உடன் 'சீதா'வை தங்க வைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் செயல் என்பதால் சிங்கங்களின் பெயர் மாற்றப்பட வேண்டும் என்றும் அக்பரின் துணை சீதையாக இருக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

வழக்கு விசாரணையின்போது, "உங்களது செல்லப் பிராணிக்கு இந்து கடவுள் அல்லது இஸ்லாத்தின் நபிகள் பெயரைச் சூட்டுவீர்களா?" என்று மேற்கு வங்க மாநில அரசின் வழக்கறிஞரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். தொடர்ந்து சிங்கங்கள் பெயரை மாற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி, “இந்தப் பெயரை யார் வைத்தது?. நீங்கள் ஒரு பொதுநல அரசு, மதச்சார்பற்ற அரசு, ஏன் சிங்கத்துக்கு சீதை, அக்பர் பெயரை வைத்து சர்ச்சையை உருவாக்க வேண்டும்? இந்த சர்ச்சை தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்றார்.

சிங்கத்துக்கு அக்பர் என்று பெயர் வைப்பதை நானும் ஆதரிக்கவில்லை என்றும் மதச்சார்பற்ற முகலாய பேரரசராக அக்பர் திகழ்ந்தார் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார். மேலும் இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர், மத போராளிகள், மரியாதைக்குரியவர்கள் பெயர்களை இனி விலங்குகளுக்கு சூட்ட வேண்டாம். சர்ச்சைகளை தவிர்க்க இரண்டு சிங்கங்களின் பெயர்களை மாற்றுங்கள்" என்று உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் திரிபுரா மாநிலத்தின் முதன்மை தலைமை வனக்காவலர் பிரபின் லால் அகர்வாலை பணி இடைநீக்கம் செய்து அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow