"நீதித்துறையை சிதைக்க முயற்சி..? " தலைமை நீதிபதிக்கு 21ஓய்வுபெற்ற நீதிபதிகள் கடிதம் !
நிலையற்ற அரசியல் நலன்களின் விருப்பங்கள் மற்றும் கற்பனைகளில் இருந்து விடுபட்டு இருப்பது மிகவும் கட்டாயம்- ஓய்வுபெற்ற நீதிபதிகள்
நீதித்துறையின் நம்பகத்தன்மை மற்றும் சுதந்திரத்தை சிதைக்கும் முயற்சிகள் அதிகரித்து வருவதாக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு ஓய்வு பெற்ற 21 நீதிபதிகள் கடிதம் எழுதியுள்ளனர்.
மக்களவைத் தேர்தல்களம் சூடுபிடித்துள்ள நிலையில் இந்தியா முழுவதும் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பரபரப்பான தேர்தல் சூழலில், நீதித்துறையின் சுதந்திரம் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டு, 21 ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், கணக்கிடப்பட்ட அழுத்தம் மற்றும் நீதித்துறையை குறைத்து மதிப்பிட உட்படுத்தும் தீவிர முயற்சிகள் கவலையடைய செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். குறுகிய அரசியல் நலன்கள் மற்றும் தனிப்பட்ட ஆதாயங்களால் தூண்டப்பட்டு, நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கை சிதைக்க சிலர் பாடுபடுவதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதுபோன்ற செயல்கள் நமது நீதித்துறையின் புனிதத்தை அவமதிப்பது மட்டுமின்றி, சட்டத்தின் பாதுகாவலர்களாக உள்ள நீதிபதிகளின் நேர்மை மற்றும் பாரபட்சமற்ற கொள்கைகளுக்கு சவாலாக உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன், சில குழுக்களின் செயல்பாடுகள் கவலையளிப்பதாக தெரிவித்த ஓய்வுப்பெற்ற நீதிபதிகள், அடிப்படையற்ற கோட்பாடுகளை பரப்புவது முதல் நீதித்துறை முடிவுகளை தங்களுக்கு ஏற்றார்போல மாற்ற நேரடியாகவும் மறைமுகமாகவும் முயற்சிப்பது ஆபத்தானது என தெரிவித்தனர்.
இறுதியாக, நீதித்துறையானது ஜனநாயகத்தின் தூணாக, நிலையற்ற அரசியல் நலன்களின் விருப்பங்கள் மற்றும் கற்பனைகளில் இருந்து விடுபட்டு இருப்பது மிகவும் கட்டாயம் என அவர்கள் தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கின்றனர்.
What's Your Reaction?