திரைக்கு வருகிறார் திருவள்ளுவர்... படம் எத்தனை மொழிகளில் ரிலீஸ்னு தெரியுமா?...

Apr 15, 2024 - 22:05
Apr 16, 2024 - 09:19
திரைக்கு வருகிறார் திருவள்ளுவர்... படம் எத்தனை மொழிகளில் ரிலீஸ்னு தெரியுமா?...

உலகப்பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாகும் திரைப்படத்தின் பூஜை சென்னையில் விமரிசையாக நடைபெற்றது. 

தமிழ் சினிமாவில் பாரதியார், காமராஜர், பெரியார், ஜெயலலிதா போன்ற தலைவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வந்துள்ளது. அந்த வகையில் உலகப் பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளது. இந்தப் படத்தின் பூஜை சென்னையில் விமரிசையாக நடைபெற்றது. விழாவில் படத்தில் நடிக்கும் நடிகர்கள் தங்களது கதாபாத்திர வேடங்களில் கலந்துகொண்டனர். 

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை ரமணா கம்யூனிகேஷன்ஸ் பட நிறுவனம் தயாரிக்கிறது.  இந்த நிறுவனம் ஏற்கனவே காமராஜர் வாழ்க்கை வரலாற்றை 'காமராஜ்' என்ற பெயரில் தயாரித்து வெளியிட்டது. அந்த படம் தமிழ்நாடு அரசின் சிறப்பு விருதினைப் பெற்றதோடு, காமராஜரின் வரலாற்றுக்கான ஆவணமாகவும் திகழ்கிறது. காமராஜ் படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதிய செம்பூர் கே.ஜெயராஜ் தான் திருவள்ளுவர் படத்திற்கான திரைக்கதையை எழுதியுள்ளார். இதனை ஏ.ஜே.பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.  படத்தில் திருவள்ளுவராக கலைச்சோழன், வாசுகியாக தனலட்சுமி, நக்கீரனாக சுப்பிரமணிய சிவா, பாண்டிய மன்னனாக O.A.K.சுந்தர் ஆகியோர் நடிக்கின்றனர். எட்வின் சகாய் என்பவர் ஒளிப்பதிவு செய்கிறார். 

இதுகுறித்து பேசிய இயக்குநர் பாலகிருஷ்ணன், "திருக்குறளின் உள்ளார்ந்த ஒளியை, அதன் உயிர்ப்பை மூன்று மணி நேர திரைப்படத்திற்குள் அடக்குவது அத்தனை எளிதல்ல. ஆனாலும்,  முடிந்தவரை சிறப்பாக கொடுக்கிறோம்.  திருவள்ளுவரோடு 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாட்டையும் இத்திரைப்படத்தில் பதிவு செய்ய உள்ளோம். மூவரசோடு, வேணாடு, பூழிநாடு, பன்றிநாடு, அருவாநாடு, வள்ளுவநாடு உட்பட பல்வேறு சிற்றரசுகள் குறித்தும், தமிழ் அறிஞர்களுக்கிடையே நிகழ்ந்த வீரம் செறிந்த போர்க்களக் காட்சிகளும் இத்திரைப்படத்தில் இடம் பெறுகின்றன. அன்றைய தமிழர்களின் பண்பாடு, தொழில், வணிகம் என வாழ்வியல் குறித்தும்  பேச இருக்கிறது. மெய்யியல், அறவியல், அரசியல், பொருளியல், சமூகவியல் என அத்தனை தரவுகளோடும், சங்க கால ஐந்து நில மாந்தர்களும் திருவள்ளுவர் திரைப்படத்தல் இடம் பெறுகின்றனர் எனக் கூறினார். 


தொடர்ந்து பேசிய அவர், மகாத்மாவும், திருவள்ளுவரும் இன்று உலக அரங்கில், அறிஞர்கள் மத்தியில் இந்தியாவின் முகங்களாக அறியப்படுகின்றனர்.

'மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் 
     மகிமை இல்லை
திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதை வணங்கச் 
     செய்தல் வேண்டும்'. 

என்ற பாரதியின் வரிகளை கட்டளையாக ஏற்றே திருக்குறளை திரைப்படமாக்கத் தீர்மானித்தோம். பைபிளிற்குப் பின் உலகில் அதிக மொழிகளில் பெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள். அதனால், திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ள அனைத்து மொழிகளிலும் இத்திரைப்படத்தினை சப்-டைட்டிலோடு உலகெங்கும் திரையிடத் திட்டமிட்டுள்ளோம் எனத் தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow