விளாத்திகுளம் கண்மாய்களை மீட்க கோரிய வழக்கு... தூத்துக்குடி ஆட்சியர் பதிலளிக்க மதுரை ஐகோர்ட் உத்தரவு...

Mar 19, 2024 - 19:22
விளாத்திகுளம் கண்மாய்களை மீட்க கோரிய வழக்கு... தூத்துக்குடி ஆட்சியர் பதிலளிக்க மதுரை ஐகோர்ட் உத்தரவு...

விளாத்திகுளம் அருகே கண்மாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அதனை மீட்டுத் தரக்கோரி தொடரப்பட்ட வழக்கில், தூத்துக்குடி ஆட்சியர் பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதுக்குளம் மற்றும் உடையகுளம் கண்மாய்கள் சுமார் 2500 ஏக்கர் பரப்பளவில் உள்ளன. இந்தக் கண்மாய்களைச் சில தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமித்து, உப்பளம் மற்றும் கடல் உணவுகள் பதப்படுத்தும் பணிகளைச் சட்ட விரோதமாக மின் இணைப்பு பெற்று, ஆழ்துளைக் கிணறு மூலமாகத் தண்ணீர் எடுத்து உபயோகப்படுத்துவதாக கூறப்படுகிறது. 

இதனால், கண்மாய் முழுவதுமாக மாசடைந்து, அருகில் உள்ள கிராமங்களுக்குத் தண்ணீர் ஆதாரம் இன்றி உள்ளது. இந்தக் கண்மாய்களுக்கு அருகே சிப்காட் நிறுவனம் மூலம் நிறுவனங்கள் அமைய இருக்கும் நிலையில், இது போன்று தனி நபர்கள் கண்மாய்களை ஆக்கிரமித்து நிறுவனங்கள் நடத்தி வருகின்றனர். எனவே கண்மாய்களை ஆக்கிரமித்து நிறுவனங்கள் கட்டியுள்ளவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். 

இந்த வழக்கு, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு குறித்து பதிலளிக்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow