பழநியில் ஆக்கிரமிப்பு... தடுப்புகளை அமைக்க கோயில் நிர்வாகத்திற்கு நீதிமன்றம் உத்தரவு..
தனியார் பஞ்சாமிர்த கடைகளை 5 மாதங்களில் அகற்றிவிடுவோம் என அரசுத் தரப்பில் தகவல்
வணிக ரீதியிலான கடைகள் பழநி கிரி வீதியை ஆக்கிரமிக்காமல் தடுக்க, பக்கவாட்டில் தடுப்புகளை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோயில் நிர்வாகத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி கோயில் கிரிவலப் பாதையில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளதாகவும், அதை அகற்றுவது குறித்து தொடரப்பட்ட வழக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் அகற்றாததால் அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில், கிரிவலப் பாதையில், கூடுதலாக மின்விளக்குகள், சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என்ற பரிந்துரையை விரைவில் நடைமுறைப்படுத்த உள்ளதாகவும், நீதிமன்ற உத்தரவுப்படி கிரி வீதியில் உள்ள தனியார் பஞ்சாமிர்த கடைகளை 5 மாதங்களில் அகற்றிவிடுவோம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மீண்டும் கிரி வீதியில் ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் தடுக்க கோயில் நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வணிக நோக்கிலான கடைகள் கிரி வீதியில் வராமல் இருக்க அதைச் சுற்றி தடுப்புகளை அமைக்குமாறு கோயில் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
What's Your Reaction?