போதைப்பொருள் கடத்தல்... வீட்டிற்கு வைத்த சீலை அகற்றக்கோரி ஜாபர் சாதிக் மனுத்தாக்கல்...
சென்னை வீட்டிற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஜாபர் சாதிக் மனுத்தாக்கல்
போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கின் சென்னை வீட்டிற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ரூ.2,000 கோடி போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கை கடந்த 9-ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வைத்து மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.
டெல்லி சிறையில் அடைக்கப்பட்ட ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர். அவரை நேற்று (மார்ச்-18) விமானம் மூலம் சென்னை அழைத்து வந்த போலீசார், அயப்பாக்கத்தில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு தென்மண்டல அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்திவிட்டு மீண்டும் டெல்லி அழைத்துச் சென்றனர். போதைப்பொருள் கடத்தல் வழக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் இன்றுடன் (மார்ச்-19) காவல் முடிவடைந்ததை அடுத்து டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜாபர் சாதிக்கிற்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதனிடையே சென்னையில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீட்டிற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி, டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் அவரது சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
What's Your Reaction?