டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு... திருவாரூரில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்!
டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகத் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திருவாரூரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
குறைந்தபட்ச ஆதரவு விலை, வேளாண் சட்டம் ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில வாரங்களாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டக்காரர்களைக் கலைக்க போலீஸார் நடத்திய தாக்குதலில் ஒரு விவசாயி உயிரிழந்தார்.
இந்த நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாகக் கூறி, இதுவரை அவற்றை நிறைவேற்றாமல் உள்ள மத்திய அரசைக் கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் திருவாரூரில் தமிழ்நாடு காவிரி விவசாய சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்.
திருவாரூர் மற்றும் நீடாமங்கலம் ரயில் நிலையங்களில் ரயிலை மறித்து போராட்டம் நடத்திய 50க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்து தனியார் திருமண மண்டபங்களில் அடைத்தனர். விவசாயிகளின் போராட்டம் காரணமாக ரயில் நிலையங்களில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
What's Your Reaction?