தூத்துக்குடியில் திமுகவினர் பணப்பட்டுவாடா... வீடியோ ஆதாரத்துடன் புகார்.. கனிமொழிக்கு சிக்கலா?
நகர்மன்ற உறுப்பினர்கள் பணப்பட்டுவாடா செய்வதற்காக பணத்தைப் பிரித்துக் கொள்ளும் வீடியோ வெளியாகியிருக்கிறது
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழிக்கு ஆதரவாக திமுக நகர்மன்ற உறுப்பினர்கள் பணப்பட்டுவாடா செய்வதற்காக பணத்தைப் பிரித்துக் கொள்ளும் வீடியோ வெளியாகியிருக்கிறது. இதையடுத்து, தேர்தல் ஆணையம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மக்களவைத் தேர்தல் நாளை தொடங்கி, 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அரசியல் கட்சிகளின் பிரசாரங்கள் முடிந்துள்ள நிலையில், தேர்தல் பறக்கும் படையினர் தொகுதிகளை சீல் செய்து, முழு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அப்படியும் சில பகுதிகளில் அரசியல் கட்சிகள் பணப்பட்டுவாடா செய்வதாக புகார்கள் வந்த வண்ணமே உள்ளது.
இந்த நிலையில் தூத்துக்குடியில் திமுகவினர் பணப்பட்டுவாடா செய்வதற்காக ஆயத்தமாகும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக முன்னாள் எம்.பி கனிமொழியே மீண்டும் போட்டியிடுகிறார். கள நிலவரம் அவருக்குச் சாதகமாகவே உள்ள நிலையிலும் பணப்பட்டுவாடா செய்வதற்காக நகர்மன்ற உறுப்பினர்கள் கைகளில் பணம் விளையாடுவதாக தொகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
அப்படி, திருச்செந்தூர் நகராட்சியில், திமுக நகர்மன்ற உறுப்பினர் செந்தில் தலைமையில், நான்கு நகரசபை திமுக உறுப்பினர்கள் மற்றும் திமுகவினர் பொது இடத்தில் நின்றுகொண்டு, வாக்காளர்களுக்குப் பட்டுவாடா செய்ய வேண்டிய பணத்தைப் பிரித்து எண்ணிக் கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவால் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், தேர்தல் பறக்கும் படை மூலம் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
What's Your Reaction?