இரட்டை இலை சின்னத்திற்கு தடையில்லை.. போட்றா வெடிய.. கொண்டாடும் எடப்பாடி பழனிச்சாமி
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் தனக்கு இரட்டை இலை சின்னம் தர வேண்டும் இல்லாவிட்டால் எடப்பாடி அணிக்கு தராமல் முடக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் முறையிட்டிருந்தார். அதற்கு பதில் அளித்துள்ள தேர்தல் ஆணையம் அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தடையில்லை என்று தெரிவித்துள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பெரும் புயலே வீசியது. முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்தை பதவி இறக்கம் செய்து விட்டு முதல்வராக நினைத்தார் சசிகலா. உடனே ஓ.பன்னீர் செல்வம் தர்மயுத்தத்தை தொடங்கினார். அவருக்கு ஆதரவாக சில எம்எல்ஏக்கள் பின்னால் சென்றனர். அதே நேரத்தில் பெரும்பான்மை எம்எல்ஏக்கள் சசிகலா பின்னால் சென்றனர். கூவத்தூரில் எம்எல்ஏக்கள் பாதுகாக்கப்பட்டனர். சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை செல்ல நேரிட்டது. போகிற போக்கில் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கினார் சசிகலா.
2017ஆம் ஆண்டு அதிமுக பிளவு பட்டது. கட்சியும் சின்னமும் முடக்கப்பட்டது. டிடிவி தினகரனும் சிக்கலில் சிக்கவே, சசிகலா, டிடிவி தினகரனை ஒதுக்கி விட்டு ஓ.பன்னீர் செல்வத்தை துணை சேர்த்தார் எடப்பாடி பழனிச்சாமி. பிரிந்து போன ஓ.பன்னீர் செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் ஒன்றிணைந்தனர். 4 ஆண்டு காலம் சுமூகமாக ஆட்சி நடைபெற்றது. முடங்கிய கட்சி, சின்னம், கொடி மீட்கப்பட்டது. கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அதிமுக ஆட்சியை இழந்தாலும் குறிப்பிடத்தகுந்த அளவு இடங்களில் வென்று எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றது.
கடந்த 2022ஆண்டு அதிமுகவில் ஒற்றைத்தலைமை பிரச்சினை தலை தூக்கவே, ஓ.பன்னீர் செல்வம் ஓரங்கட்டப்பட்டார். அவருக்கு பின்னால் சென்ற வைத்திலிங்கம் உள்ளிட்டவர்களும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். அது முதல் அதிமுகவை மீட்கப்போகிறேன் என்று கூறி வருகிறார் ஓ.பன்னீர் செல்வம். யாரை எதிர்த்து தர்மயுத்தம் நடத்தினாரோ அவர்களுடன் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார் ஓ.பன்னீர் செல்வம்.
அதிமுகவின் இரட்டை இலையை முடக்க வேண்டும் என்று பகீரத பிரயத்தனம் செய்த ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த லோக்சபா தேர்தலில் ஓ.பன்னீர் செல்வம் பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
சுயேட்சை சின்னத்தில் போட்டியிட்டால் தான் சரியாக இருக்கும் என்பதால் ஓபிஎஸ் தாமரை சின்னத்தில் நிற்காமல் சுயேட்சை சின்னத்தை தேர்வு செய்து போட்டியிடுகிறார்.
இரட்டை இலை சின்னத்துக்காக நீதிமன்றத்தையும், தேர்தல் ஆணையத்தையும் ஓபிஎஸ் அணுகினார். ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன் மற்றும் ஆர்.சக்திவேல் அமர்வு இரட்டை இலை சின்னம் கோரி ஆணையத்தை அணுக ஓபிஎஸ் தரப்புக்கு தடையில்லை என்று தெரிவித்தனர்.
இதனையடுத்து ஓபிஎஸ் தரப்பில் அவரது ஆததரவாளர் புகழேந்தி தலைமை தேர்தல் ஆணையத்தில் ஒரு மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கூடாது. தனது தரப்புக்கு ஒதுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும். அப்படி முடக்கும் பட்சத்தில் வாளி சின்னத்தை ஒதுக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இன்றைய தினம் தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிட தடையில்லை என்று தெரிவித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச்செயலாளர் என்றும் கூறியுள்ளது தேர்தல் ஆணையம். மக்களவை தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளதால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
What's Your Reaction?