சாமிக்கு ஆடு,கோழி வெட்றதுக்கு கூட ஆப்பு.. சீரியல்களுக்கு செக்.. எச்சரித்த கார்த்தி சிதம்பரம்

"நமது பழக்க வழக்கங்களை காப்பாற்றுவதற்கு கை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்"

Mar 28, 2024 - 18:15
சாமிக்கு ஆடு,கோழி வெட்றதுக்கு கூட ஆப்பு.. சீரியல்களுக்கு செக்.. எச்சரித்த கார்த்தி சிதம்பரம்

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், குல தெய்வங்களுக்கு கிடாய் வெட்டுதல், கோழி பலியிடுதல் போன்ற வழிபாடுகளுக்கு தடை விதிப்பார்கள் என காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

மக்களவை தேர்தலில் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பாக கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார். இந்த நிலையில்  சிங்கம்புணரியில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், அமைச்சர் பெரியகருப்பன் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். 

அப்போது கூட்டத்தில் பேசிய கார்த்தி சிதம்பரம், "மத்தியில்  பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நமது மாநில உரிமைகள் பறிக்கப்படும். நமது மொழி அழிக்கப்படும்.  வாழ்க்கை முறை சிதைக்கப்படும். ஏனெனில் பாஜக இந்துத்துவா ஆட்சி நடத்துகிறது. இந்தி மட்டுமே பேச வேண்டும் எனவும் பிற மொழி பேசக் கூடாது எனவும் நினைக்கிறது.  இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் இருக்கக் கூடாது என நினைக்கிறது. 

அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சாமிக்கு கிடாய் வெட்டுதல், கோழி பலியிடுதல், சுருட்டு வைப்பது போன்ற வழிபாடுகளை தடுத்து நிறுத்துவார்கள். சமஸ்கிருத மொழி அடிப்படையில்தான் சாமி கும்பிட வேண்டும் எனவும் கோயில்களை தனியார் கையில் கொடுத்து  இவர்கள் எல்லாம் உள்ளே வரக்கூடாது என்று கூறுவார்கள்" எனவும் எச்சரிக்கை விடுத்தார். 

தொடர்ந்து பேசிய அவர், "பாஜக ஆட்சிக்கு வந்தால் இனி தமிழ் சீரியல்கள், நாடகங்கள் தவிர்க்கப்பட்டு இந்தி சீரியல், நாடகங்கள் மட்டுமே ஒளிபரப்பாகும். அந்தநிலை வரவேண்டாம் என்று நினைத்தால் தமிழ் மொழி, கலாச்சாரம், பழக்க வழக்கங்களை காப்பாற்றுவதற்கு கை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow