பம்பரம் சின்னம் கிடையாது.. கைவிரித்த தேர்தல் ஆணையம்..
ஒரே ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிடுவதால் மதிமுகவுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தல் நெருங்கும் வேளையில், தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சின்னம் பிரச்னை என்பது தொடர்ந்து பல கட்சிகளுக்கு நீடித்து வருகிறது. நீண்ட இழுபறிக்கு பிறகு மைக் சின்னம் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது மதிமுகவுக்கு சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த மக்களவைத் தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் வேண்டும் எனக் கோரி அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கப்பூர்வாலா மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, வேட்புமனு தாக்கலுக்கு ஒரே நாளே உள்ள நிலையில், தங்கள் கட்சிக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை எனவும், தங்கள் கோரிக்கையை பரிசீலிக்கும் படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடும் படியும் வைகோ கோரிக்கை விடுத்திருந்தார். 14 ஆண்டுகளுக்கு முன்பு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட நிலையில், மதிமுகவுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட தொகுதியின் தேர்தல் அதிகாரி தான் முடிவு எடுப்பார் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தங்களுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கக்கோரி மதிமுக மனு அளித்துள்ளதாகவும், அந்த மனு மீது புதன்கிழமை காலை ஒன்பது மணிக்குள் முடிவெடுக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்று (மார்ச் 27) மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஒரே ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிடும் கட்சிக்கு சின்னங்கள் ஒதுக்க முடியாது என திட்டவட்டமாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள நிலையில், இன்று மதியம் இந்த முடிவு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் அறிவிக்கவுள்ளது.
What's Your Reaction?