காசா மக்களுக்கு வான்வழியாக நிவாரணப் பொருட்கள் வழங்குவோம் - ஜோ பைடன்
காசாவில் உணவு பெறச் சென்றபோது 115 பேர் இஸ்ரேல் படையால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதி, மக்களுக்கு விரைவில் ராணுவம் மூலம் வான்வழியாக நிவாரணப் பொருட்கள் வழங்குவதாக அமெரிக்க அதிபர் ஜோபைடன் அறிவித்துள்ளார்
காசாவில் உணவு பெறச் சென்றபோது 115 பேர் இஸ்ரேல் படையால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதி, மக்களுக்கு விரைவில் ராணுவம் மூலம் வான்வழியாக நிவாரணப் பொருட்கள் வழங்குவதாக அமெரிக்க அதிபர் ஜோபைடன் அறிவித்துள்ளார்.
இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் போர் மூண்டது. இதில் வரலாறு காணாத வகையில் காசா மிகப்பெரிய பாதிப்பை அடைந்துள்ளது. 5 மாதங்களுக்கு மேலாக நீடித்து வரும் போரில் காசாவில் மட்டும் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இஸ்ரேல் படையால் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் லாரியில் வந்த நிவாரணப் பொருட்களை வாங்கச் சென்ற அப்பாவி மக்கள் மீது இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 115 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நிவாரணப் பொருட்களை வாங்க வந்த கூட்டம், தங்களை அச்சுறுத்தும் வகையில் வந்ததால் தற்காப்பிற்காக துப்பாக்கிச்சூடு நடத்தியதாக இஸ்ரேல் ராணுவ தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோபைடன் தனது அதிகாரப்பூர்வ அலுவலகமான ஓவல் அலுவலகத்தில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்த ஆலோசனைக்கு பின் ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, காசா மக்களுக்கு விரைவில் அமெரிக்க ராணுவம் மூலம் வான்வழியாக நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் எனவும் போர் நிறுத்தத்துக்கான வழிமுறைகள் குறித்து ஆராயப்படும் எனவும் அவர் கூறினார். ஜோர்டான் மற்றும் சில நாடுகளுடன் இணைந்து இப்பணிகளில் ஈடுபட உள்ளதாகவும் அவர் கூறினார்.
மார்ச் 4ம் தேதிக்குள் போர்நிறுத்தம் ஒப்பந்தம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த அவர், ரமலான் நோன்பு மாதத்தையொட்டி இத்தகைய ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் எனவும், ஆனால் அத்தகைய முடிவை அடைவது தற்போது சாத்தியமில்லை எனவும் தெரிவித்தார்.
What's Your Reaction?