மீண்டும் விவசாயிகள் போராட்டம் - மத்திய அரசு கலக்கம்!
‘டெல்லி நோக்கி செல்லுங்கள்’ என்ற பெயரில் விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில், மத்திய அமைச்சர்கள் விவசாய அமைப்புகளை பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
மத்திய அரசுக் கொண்டுவந்த வேளாண் சட்டம், விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் உள்ளிட்டப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2020-ம் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு வருடத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த போராட்டத்தில் விவசாயிகள் பலரும் உயிரிழந்தனர்.
இந்நிலையில், பிப்ரவரி 13ஆம் தேதி முதல் ‘டெல்லியை நோக்கி செல்லுங்கள்’ என்ற பெயரில் சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஜ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200 விவசாய அமைப்புகள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்த போராட்டத்தில் டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், பிஹார், உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்க உள்ளனர்.
உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் கெரி வன்முறையில் உயிரிழந்த 8 பேர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு நீதி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து, உத்திரப்பிரதேச மாநில எல்லைகளில் 144 தடை உத்தரவுப் போடப்பட்டுள்ளது. 50ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், உணவு மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் பியூஸ் கோயல், வேளாண் துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா, உள்விவகாரத் துறை அமைச்சர் நித்யானந்த் ராய் ஆகிய மூன்று அமைச்சர்களும் விவசாயிகள் அமைப்புகளை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
What's Your Reaction?