கைதிகள் பல்லை பிடுங்கி சித்தரவதை வழக்கில் ஏஎஸ்பி உள்பட 15 பேருக்கு ஜாமீன்

தங்களின் விளம்பரத்திற்காக குற்றவியல் நடைமுறை சட்டத்திற்கு புறம்பாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்

Dec 16, 2023 - 14:07
Dec 16, 2023 - 21:50
கைதிகள் பல்லை பிடுங்கி சித்தரவதை வழக்கில் ஏஎஸ்பி உள்பட 15 பேருக்கு ஜாமீன்

கைதிகள் பல்லை புடுங்கி சித்தரவதை செய்த விவகாரத்தில் ஏஎஸ்பி பல்வீர் சிங் உள்பட 15 பேருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. வழக்கு விசாரணை வரும் 26ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்ட பிரிவில் உள்ள அம்பாசமுத்திரம் கல்லிடைக்குறிச்சி விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையங்களில் வழக்கு விசாரணைக்காக வந்தவர்களின் பற்களை பிடுங்கி சித்திரவதை செய்வதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவின்படி இது தொடர்பாக சேரன்மகாதேவி சார் ஆட்சியர் கடந்த மார்ச் 26 ஆம் தேதி விசாரணை நடத்தினார்.

இதற்கிடையில் அப்போதைய அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்ட உதவி காவல்துறை கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மார்ச் 29ஆம் தேதி பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

சேரன்மகாதேவி சார் ஆட்சியர்  முகமது சபீர் ஆலம்  இடைக்கால அறிக்கை சமர்ப்பித்தார்.அதன் அடிப்படையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின்பேரில், மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி தனது முதல் கட்ட விசாரணையும் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் இரண்டாம் கட்ட விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பித்தார்

இதனை அடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் உலக ராணி மற்றும் ஏடிஎஸ்பி சங்கர் இந்த வழக்கு விசாரணை மேற்கொண்டார்.இதில் வேத நாராயணன் சூர்யா வெங்கடேசன் மற்றும் அருண்குமார் ஆகியோரின் புகார்களின் பெயரில் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங், காவல் ஆய்வாளர் ராஜகுமாரி உள்ளிட்ட 15 காவல் துறை அலுவலர்கள் மீது குற்றத்தில்   முகாந்திரம் இருப்பதாக சிபிசிஐடி போலீசாரால் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பான சிபிசிஐடி போலீசால் பதிவு செய்யப்பட்ட நான்கு வழக்குகள் நெல்லை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.இதில் 15 காவல்துறையினரும் நீதிமன்றத்தில் காலை பத்தரை மணிக்கு ஆஜராகினர்.

 புகார் கொடுத்தவர்களின் சார்பில் ஆஜரான  சுபாஷ் சேனையின் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் மகாராஜன் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமினில் விடுதலை செய்யக்கூடாது என்றும் முறையாக சிபிசிஐடி விசாரணை நடத்தபடவில்லை என்றும், பல்பிடுங்கியதற்கு ஆதாரமாக உள்ள கட்டிங் பிளேயர்,கற்கள் ரத்த கறை படிந்த ஆடைகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்யவில்லை என்றும் இவர்களை கைது செய்து விசாரணை நடத்தி பல்பிடுங்கியதற்கு பயன்படுத்திய ஆயுதங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். 

வாத பிரதிவாதம் மாதங்களுக்குப் பின்பு இதனை விசாரித்த நீதிபதி திருவேணி குற்றம் சாட்ட 15 காவல்துறை அலுவலர்களையும் பிணையில் விடுதலை செய்தார்.மேலும் வழக்கு விசாரணையை வரும் டிச.26ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

ஜாமின் வழங்கப்பட்ட பின்பு செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் மகாராஜா, ”இந்த வழக்கை பொறுத்தவரை குற்றவாளிகளை முறையாக கைது செய்து காவல்துறை காவலில் எடுத்து விசாரணை செய்து பல்பிடுங்கியதற்கு உபயோகப்படுத்திய சாதனங்களையும் பறிமுதல் செய்ய வேண்டும். இவர்களின் ஜாமீன் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் உள்ளோம்” என்றார்.

நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த பின்பு நீதிமன்றம் வாயிலாக குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு அழைப்பானை அனுப்பப்பட்டு அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படும்போது, அவர்களை கைது செய்வதற்கான எந்த முகாந்திரமும் கிடையாது. 
குற்றவியல் நடைமுறை சட்டத்திலும் இதற்கு இடம் கிடையாது. எனவே நீதிமன்றம் முறையான ஜாமின் வழங்கி உள்ளது .சிலர் தங்களின் விளம்பரத்திற்காக குற்றவியல் நடைமுறை சட்டத்திற்கு புறம்பாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என குற்றம் சுமத்தப்பட்டவர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் துரைராஜ் தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow