பாஜக ஆளாத மாநிலங்களில் முதலமைச்சர்களுக்கும் - ஆளுநர்களுக்கும் இடையே நீடித்து வரும் மோதல் போக்கு..!

Feb 12, 2024 - 14:06
பாஜக ஆளாத மாநிலங்களில் முதலமைச்சர்களுக்கும் - ஆளுநர்களுக்கும் இடையே நீடித்து வரும் மோதல் போக்கு..!

பாஜக ஆளாத மாநிலங்களில் முதலமைச்சர்களுக்கும் - ஆளுநர்களுக்கும் இடையே நீடித்து வரும் மோதல் போக்கு, தற்போது அடுத்தக்கட்டத்திற்கு சென்றிருக்கிறது. அண்மையில், அம்மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவை நிகழ்வுகளே இதற்கு சான்றாகும். 

இந்திய அரசியலமைப்பு சட்டப்படி ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரை ஆளுநர், தனது உரையுடன்  தொடங்கி வைப்பது வழக்கம். ஆளுநர்கள் உரையாற்றும் போது, பாஜக ஆளும் மாநிலங்களில் சுமூகமாகவும், பாஜக ஆளாத மாநிலங்களில் சில இடையூறுகளுடனும் அரங்கேறி வருகிறது. உதாரணமாக கேரள மாநிலத்தில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடரில், அரசு தயாரித்து தந்த உரையை ஆளுநர் ஆரிப் முகமது கான், முழுவதும் வாசிக்காமல் புறக்கணித்தார். அரசின் புகழ் பாடும் அந்த உரையை வாசிக்க விரும்பவில்லை எனக் கூறி, வெறும் இரண்டு நிமிடங்களிலேயே தமது உரையை அவர் முடித்துக் கொண்டார். 

இதேபோல், மேற்கு வங்கத்திலும் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரும் சர்ச்சையோடு தான் தொடங்கியது. கூட்டத்தொடரை ஆளுநர் உரையுடன் தொடங்கியபோது, சபாநாயகர் பிமன் பானர்ஜி  மாநில பாடலான "பங்களார் மாட்டி பங்களா ஜல்" பாடலை ஒலிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதன்படி இசைக்கப்பட்ட போது, பாஜக உறுப்பினர்கள் எழுந்து நின்று தேசிய கீதத்தைப் பாடினர். இதனால் அவையில் குழப்பம் ஏற்பட்டது.

இதனிடையே, தமிழ்நாட்டில் இந்தாண்டின் முதல் கூட்டத்தொடர் சுமூகமாக தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலால் பரபரப்பு உண்டானது. தமது உரையை தமிழில் தொடங்கிய ஆளுநர், தேசிய கீதம் இசைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றார். ஆளுநரின் இந்த குற்றச்சாட்டு அவையில் இருந்தவர்களுக்கு மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து,  மாநில அரசு தயார் செய்து தந்த உரையில் கூறப்பட்ட சில கருத்துகளில், தமக்கு உடன்பாடு இல்லை என்றார். இதனால், உரையை வாசிக்காமல் அமர்ந்தார். அவரது உரையை அப்பாவு வாசித்த நிலையில், அவை நிறைவில் தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்னதாகவே ஆளுநர் புறப்பட்டுச் சென்றார். 

டெல்லி, பஞ்சாப், தெலங்கானா,  உள்ளிட்ட மாநிலங்களிலும் இதே நிலை இருப்பதால், அரசியலமைப்பு சட்டத்தின் படி ஆளுநர்களும், மாநில அரசுகளும் செயல்பட வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிக்க   |  மூன்றே நிமிடங்களில் உரையை முடித்த ஆளுநர்..!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow