VB - G Ram G மசோதா மக்களவையில் அறிமுகம்: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்துக்கு மாற்றாக 'வளா்ந்த பாரத வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார ஊரக உறுதியளிப்புச் சட்ட' (VB- G RAM G) மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு இன்று அறிமுகம் செய்தது.
மத்திய விவசாயத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான், நாடாளுமன்ற மக்களவையில் இந்த மசோதாவை இன்று தாக்கல் செய்தார்.இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ''இந்த திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு 40% ஆக குறைத்துள்ளது'' என காங்கிரஸ் எம்பி பிரியங்கா குற்றம் சாட்டினார். தொடர்ந்து மசோதா மீது அனல் பறக்கும் விவாதம் நடந்து வருகிறது. இதனால் கூச்சல், குழப்பம் நிலவியது.
இதனால், மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பிரியங்கா காந்தி, டி.ஆர். பாலு, ஜோதிமணி உள்ளிட்டோர் இந்த மசோதாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.காந்தியின் புகைப்படங்களை கையில் ஏந்தி நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய அரசுக்கு எதிரான முழக்கங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக அரசு கடும் எதிர்ப்பு
வறுமை ஒழிப்புத் திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தையே ஒன்றிய அரசு முடக்க பார்க்கிறது. கிராமப்புற ஏழைகளை வஞ்சிக்கும் பாஜகவுக்கும் அதனை ஆதரிக்கும் அடிமைகளுக்கும் மக்கள் வாக்குச்சாவடியில் பதில் தருவார்கள் என ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?

