ஆளுநர் பதவியை நீக்குங்கள்... மத்திய அரசை வலியுறுத்தும் விசிக தேர்தல் அறிக்கை...

Apr 9, 2024 - 11:36
ஆளுநர் பதவியை நீக்குங்கள்... மத்திய அரசை வலியுறுத்தும் விசிக தேர்தல் அறிக்கை...

ஆளுநர் பதவியை நீக்க மத்திய அரசுக்கு வலியுறுத்துவோம் என்பன உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுடன் தேர்தல் அறிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டார்.

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் இன்று, சிதம்பரம் மாவட்ட ஜெயங்கொண்டபட்டிணம் பகுதியில் தேர்தல் அறிக்கையினை வெளியிட்டார், வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் முதல் பிரதியை பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

அதன் பிறகு பேசிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன், அறிக்கையில் இடம்பெற்ற முக்கியமானவற்றை மட்டும் விளக்கிக் கூறினார். குறிப்பாக, ஆளுநர் பதவியை நீக்க மத்திய அரசுக்கு வலியுறுத்துவோம், தமிழ்நாட்டில் பல்கலைக்கழக வேந்தராக ஆளுநர் இருக்கக்கூடாது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கையில் இருக்கும் முக்கியமான திட்டங்களில், ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு எதிர்ப்பு, தேர்தல் ஆணையர் நியமனச் சட்டம் ரத்து, வாக்குப்பதிவு முறைக்கு பதிலாக பழையபடி வாக்குத்தாள் முறையை கொண்டுவருவது, தேவையற்ற தேர்தல் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும், இந்தி எதிர்ப்பு, இந்தியா முழுவதும் தமிழ் செம்மொழி வாரக் கொண்டாட்டம் நடத்த வேண்டும்.

மேலும், வறுமைக்கோட்டின் உச்சவரம்பினை உயர்த்த வேண்டும், 200 நாட்கள் வேலைவாய்ப்பு உறுதி செய்ய சட்டம், விவசாயிகள் ஓய்வூதியத் திட்டம் கொண்டுவருவது, ஜிஎஸ்டி வரியை ஒழிக்க வேண்டும், விவசாயக் கடன்களை ரத்து செய்ய வேண்டும், விவசாயத்திற்கென்று தனி பட்ஜெட் ஒதுக்க வேண்டும், பெட்ரோலியப் பொருட்களின் மீது அரசின் விலைக் கட்டுப்பாடு கொண்டுவர வேண்டும், ராணுவத்தின் நிதியைக் குறைத்து கல்விக்கான நிதியை அதிகரிக்க வேண்டும், தனியார்மயமாதலைக் கைவிட வேண்டும், நீதித்துறையிலும் தனியார் துறையிலும் இடஒதுக்கீடு கொண்டுவர வேண்டும், சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு நடத்த வேண்டும், உயர்சாதி இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்.

மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையே ஒழிக்க வேண்டும். இடுகாடு பணியில் இருந்து தலித்துகளை விடுவிக்க வேண்டும். பழங்குடியினருக்கு தனி பட்டா வழங்க வேண்டும், தலித் கிருத்தவர்களை பட்டியலில் இணைக்க வேண்டும், இடஒதுக்கீட்டிற்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும், பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் விசிக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow