டாக்டராக ஆசைப்படும் திருநங்கை மாணவி நிவேதா.. கல்வி செலவை ஏற்பதாக முதல்வர் ஸ்டாலின் உறுதி

சென்னை: +2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள திருநங்கை மாணவி நிவேதா இன்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். நிவேதாவின் உயர்கல்வி செலவு முழுவதையும் ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

May 7, 2024 - 15:39
டாக்டராக ஆசைப்படும் திருநங்கை மாணவி நிவேதா.. கல்வி செலவை ஏற்பதாக முதல்வர் ஸ்டாலின் உறுதி


சென்னை நடுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் திருநங்கை நிவேதா.  இந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதிய ஒரே ஒரு திருநங்கை இவர் தான்.
+2வில் 283 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்திருக்கிறார் நிவேதா. 

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள சென்னை சேர்ந்த திருநங்கை மாணவி நிவேதா இன்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். நிவேதாவின் உயர்கல்வி படிப்பு செலவை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ளும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

 திருநங்கை மாணவி நிவேதா நீட் தேர்வுக்கு எழுதி உள்ள நிலையில் மருத்துவராக வேண்டும் என முதலமைச்சரிடம் தெரிவித்துள்ளார். அப்போது முதல்வர் மு க ஸ்டாலின் நீங்கள் என்ன ஆசைப்படுகிறீர்களோ அதை படியுங்கள் அதற்கான முழு செலவையும் அரசு ஏற்கும் என உறுதி அளித்துள்ளார். 

செய்தியாளர்களிடம் பேசிய நிவேதா, நான் பொறந்து வளர்ந்தது பள்ளிக்கரணை பகுதியில்தான். ஸ்கூல் படிக்கும்போது எனக்குள்ள இருந்த மாற்றத்தை எங்க வீட்ல எடுத்துச் சொன்னேன். திருநங்கையாகவே எங்க வீட்டிலும் என்னை ஏத்துக்கிட்டாங்க. இருந்தாலும் நான் என் திருநங்கை மக்களோட நடுகுப்பம் பகுதியில் இருக்கேன். இங்க சாம்பி அம்மா தான் என்னை வளர்க்கிறாங்க. இங்க இருக்கிறவங்க தான் என்னை படிக்கவும் வைக்கிறாங்க.

ஒன்பதாம் வகுப்பு முடிச்சதும் படிப்பை விட்டுட்டேன். மூணு வருஷத்துக்குப் பிறகு மறுபடி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி 350 மார்க் எடுத்தேன். பிளஸ் ஒன்ல ப்யூர் சயின்ஸ் குரூப் எடுத்துப் படிச்சேன். என்னுடைய இந்த சூழலிலும் நான் படிச்சு பாஸ் ஆனது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. 

நீட் தேர்வுக்காக கோச்சிங் போயிட்டு இருந்தேன். இப்ப அந்தத் தேர்வும் முடிஞ்சிருக்கு. அங்கேயும் நான் ஒருத்திதான் திருநங்கை. அந்த ரிசல்ட்டும் நல்லா வரும்.. அதிலும் செலக்ட் ஆவேன்னு நம்புறேன். நாங்க இருக்கிற வீடு கூரை வீடுதான். பெரிய அளவுல பொருளாதார வசதியெல்லாம் இல்லை. எனக்கு டாக்டர் ஆகணுங்கிறது கனவு. என் சமூக மக்களுக்கும், பொது மக்களுக்கும் மருத்துவராகி சேவை செய்யணும்னு ஆசை. மருத்துவம் படிக்கிறதுக்கான சீட் எனக்கு கிடைக்கும்னு நம்புறேன் என்று கூறியுள்ளார் நிவேதா. என்னுடைய மேற்படிப்பிற்கு உதவி செய்வதாக முதல்வர் உறுதி அளித்துள்ளதாகவும் நிவேதா கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow