சசிகலா மேல்முறையீட்டு வழக்கில் டிச.4ம் தேதி தீர்ப்பு

கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழு கூட்டமானது சட்ட விதிகளின் படி கூட்டப்படவில்லை என வாதம்

சசிகலா மேல்முறையீட்டு வழக்கில் டிச.4ம் தேதி தீர்ப்பு

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கியதை எதிர்த்து வி.கே.சசிகலா தொடர்ந்த மேல்முறையீடு மனு மீது வரும் திங்கட்கிழமை (டிச 04) சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.

அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு மறைந்த பிறகு, அவரது தோழியான வி.கே.சசிகலாவை இடைக்கால பொதுச்செயலாளராகவும், டிடிவி.தினகரனை துணை பொதுச்செயலாளராகவும் அதிமுகவினரால்  தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், 2017ல் நடந்த பொதுக்குழுவில் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கியும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.அதன்பின்னர் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் பதவியேற்றனர்.

இந்த நிலையில் இடைக்கால பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கிய தீர்மானத்தை செல்லாது என அறிவிக்கக்கோரி வி.கே.சசிகலா சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அதில், சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக உரிமை கோர முடியாது  என உத்தரவிட்டு வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. 

உரிமையியல் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா தரப்பில்  மேல்முறையீடு செய்தார்.இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன் மற்றும் என்.செந்தில்குமார் முன்பு விசாரணை நடைபெற்றது.அப்போது சசிகலா தரப்பில், கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழு கூட்டமானது சட்ட விதிகளின் படி கூட்டப்படவில்லை. அந்த கூட்டத்தில் அவர்களாகவே தங்களை ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யபட்டதாக வாதிடப்பட்டது.

முதல்வராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தபோது கூட எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை எனவும், தற்போது வரை அதிமுகவில் உறுப்பினராக தான் உள்ளதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது தான் என தெரிவிக்கப்பட்டது.

அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில், உரிய விதிகளின் படி பொதுக்குழு நடைபெற்றது என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உறுதி செய்துள்ளதாகவும், கட்சியின் உச்ச பட்ச அதிகாரம் கொண்ட பொதுக்குழு விதிகளின் படி கூடி தீர்மானம் நிறைவேற்றியதாகவும்,எனவே சசிகலாவின் வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்பதால் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.

ஓ.பன்னீர் செல்வம் தரப்பில், கடந்த  2017ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், இடைக்கால பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளராக தானும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்ந்தெடுக்கபட்ட நிலையே தற்போது வரை நீடிப்பதாகவும், இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலாவை நீக்கியது சட்டப்படி செல்லும் எனவும் வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டிருந்த நிலையில், வரும் திங்கட்கிழமை (டிசம்பர் 4) காலை நீதிபதிகள் தீர்ப்பளிக்க உள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow