ஒட்டுமொத்த அமலாக்கத்துறையும் குற்றம் சொல்வது கூடாது -அண்ணாமலை
தமிழகம் முழுவதுமே கொலை களமாக மாறி வருகிறது. காவல்துறை சுதாரித்துக் கொண்டு தீவிரமாக செயல்பட்டு குற்றங்களை தடுக்க வேண்டும்
ஒருவர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்தமாக அமலாக்கத்துறையை குற்றம் சொல்லக்கூடாது என்று தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.
கன்னியாகுமரி விவேகானந்தா மையத்தில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ளும் ஆலோசனைக்கூட்டம் நடக்கிறது. அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள தூத்துக்குடி விமான நிலையம் வந்து கன்னியாகுமரி சென்றார் அண்ணாமலை.அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
ஒரு நாள் மழைக்கு கூட தாக்கு பிடிக்க முடியாத நிலையில் சென்னை இருக்கிறது.மழை பெய்து தண்ணீர் வந்ததும் வேட்டியை மடித்துக்கொண்டு பார்வையிடுவது தமிழக அரசியல்வாதிகளின் வழக்கமாகிவிட்டது. வீட்டில் மடித்துக்கொண்டு தண்ணீரில் நின்று போட்டோ சூட் நடத்துவதால் ஒன்றும் ஆகிவிடாது.இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.ஆனால், அவர்களிடம் எந்த ஒரு தீர்வும் கிடையாது.
இந்த நிலை மாற உலக அளவிலான நிபுணர்களை வரவழைத்து தீர்வு காண வேண்டும்.முன்பு ஜெனிவாவில் இது போன்ற நிலை இருந்தது. உலக நிறுவனங்களை அழைத்து கலந்தாலோசித்து பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் அங்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
மதுரையில் அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் லஞ்ச புகாரில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். தவறு யார் செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது போன்ற நடவடிக்கை ராஜஸ்தானில் கடைசியாக நடைபெற்றுள்ளது. தற்போது இங்கு நடைபெற்றுள்ளது. இது முதலும் முடிவும் அல்ல, அமலாக்கத்துறையில் ஒருவர் செய்த தவறுக்காக அமலாக்கத்துறை என்று சொல்வது சரியல்ல.
காவல்துறையில் ஒருவர் தவறு செய்தால் ஒட்டுமொத்த காவல்துறையையும் தவறு என்று கூற முடியுமா? இந்த விவகாரத்தில் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி மற்றும் தமிழக அரசியல்வாதிகள் அரசியல் முதிர்ச்சி இன்றி பேசி வருகின்றனர்.
நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில், ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வர உள்ளது.தெலுங்கானாவில் கடந்த முறை ஒரு இடத்தில் வென்ற நிலையில் இந்த முறை இரட்டை இலக்கங்களில் பா.ஜ.க. வெற்றி பெற உள்ளது.மிசோராமில் அந்த மாநில கட்சி வெற்றி பெரும் சூழல் உள்ளது. ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அங்கு துடைத்து எறியப்படும் நிலையில் உள்ளது.
சத்தீஸ்கரில் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகுதான் முழுமையாக தெரியவரும். உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வர மாட்டார் என்று கூறினார்கள். அரசியலுக்கு வரவழைக்கப்பட்டார். எம்.எல்.ஏ. ஆகமாட்டார் என்றார்கள். எம்.எல்.ஏ. ஆக்கப்பட்டார், அமைச்சராக மாட்டார் என்றார்கள். அமைச்சராக்கப்பட்டார். அதுபோல துணை முதல்வர் ஆக மாட்டார் என்று கூறினால் ஆவார் என்று அர்த்தம். அது அவர்கள் விருப்பம். இதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
தூத்துக்குடி, நெல்லையில் அடிக்கடி கொலைகள் நடைபெறுகின்றன. தமிழகம் முழுவதுமே கொலை களமாக மாறி வருகிறது. காவல்துறை சுதாரித்துக் கொண்டு தீவிரமாக செயல்பட்டு குற்றங்களை தடுக்க வேண்டும். மாலத்தீவில் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அங்கு அரசியல் சூழல் மாறி இருப்பதன் காரணமாக இடையூறுகள் ஏற்பட்டுள்ளது. நிச்சயம் மத்திய அரசு அதற்கு தீர்வு காணும்" என்றார்.
தூத்துக்குடி மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் தலைமையில் பாஜகவினர் அண்ணாமலையை வரவேற்று கன்னியாகுமரிக்கு அழைத்து சென்றனர்.
-எஸ்.அண்ணாதுரை
What's Your Reaction?