வைகாசி விசாகம்.. சிவ ஆலயங்களில் கோலாகல கொடியேற்றம்.. தேரோட்டம், தெப்ப உற்சவம் எப்போது?

வைகாசி விசாகம் திருவிழா சிவ ஆலயங்களில் கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. கும்பகோணம் அருகேயுள்ள பட்டீஸ்வரம் ஞானாம்பிகை சமேத தேனுபுரீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கொடியேற்றத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.

May 13, 2024 - 14:35
வைகாசி விசாகம்.. சிவ ஆலயங்களில் கோலாகல கொடியேற்றம்.. தேரோட்டம், தெப்ப உற்சவம் எப்போது?

நட்சத்திரங்கள் இருபத்தி ஏழில், சில நட்சத்திரங்கள் இறைவனுக்கு உகந்த நட்சத்திரங்களாகவும், இறைவன் அவதாரம் எடுத்த நட்சத்திரங்களாகவும் கருதப்படுகின்றது. அந்த அடிப்படையில் வைகாசி மாதம் வரும் விசாகம் நட்சத்திரம் வடிவேலனுக்கு உகந்த நட்சத்திரமாக பக்தர்கள் அனைவராலும் கொண்டாடப்படுகிறது. விசாக தினத்தன்று வேலனை வழிபட்டால் வெற்றிகள் வந்து சேரும்.

தீமைகளை அழிப்பதற்காக சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து அக்னி ரூபமாக அவதரித்தவர் முருகன். இந்த அவதாரம் நிகழ்ந்தது வைகாசி விசாக திருநாளில்தான். வைகாசி விசாக தினத்தன்று பால்குடங்கள் எடுத்தும், காவடிகள் சுமந்தும் முருகனின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. 

கும்பகோணம் அருகேயுள்ள பட்டீஸ்வரம் ஞானாம்பிகா சமேத தேனுபுரீஸ்வர சுவாமி திருக்கோயில் அன்னை பராசக்தி தவம் செய்ததும், சோழ மன்னர்களின் காவல் தெய்வமான துர்கை வடக்கு நோக்கி தனி சன்னதி கொண்டு எட்டு கரங்களுடன் விஷ்ணு துர்க்கையாகவும், லட்சுமி துர்க்கையாகவும் அருள்பாலிக்கிறார் காமதேனுவின் மகள் பட்டி பூஜித்து முக்தி பெற்ற தலமும், விஸ்வாமித்திரருக்கு பிரம்மரிஷி பட்டம் கிடைக்கப்பெற்றதும், திருஞானசம்மந்தருக்கு முத்து பந்தல் அமைத்து அதன் கீழ் நடந்து வரும் அழகை காண ஈசன் நந்தியை விலக கட்டளையிட்ட தலமும் ஆகும்  

இத்தகைய சிறப்புபெற்ற தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம் அதுபோல இந்த ஆண்டுக்கான விழா, இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. நந்தியம்பெருமான் பொறிக்கப்பட்ட திருக்கோடி மங்கள வாத்தியங்கள் இசைக்க, வேத மந்திரங்கள் முழங்க, ஏற்றிப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து தினமும் காலை, மாலையில் பாம்பு வாகனம், அன்னப்பறவை வாகனம், பச்சைக்கிளி வாகனம், காமதேனு வாகனம்,  உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலா நடைபெறுகிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான 17 ஆம் தேதி 5 ஆம் நாள் தன்னைத்தான் வழிபடுதல், காளை வாகனத்தில் இறைவர் இறைவி ஓலைச்சப்பரத்தில் வீதியுலா 7 ஆம் நாளான 19 ஆம் தேதி திருக்கல்யாணம் 9 ஆம் நாளான 21 ஆம் தேதி கட்டுத் தேரோட்டம் வருகிற 24 ஆம் தேதி விடையாற்றியுடன் இவ்வாண்டுக்கான வைகாசி விசாக பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.

இதே போல சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள குன்றக்குடி தேவஸ்தானத்தை சேர்ந்த நம்பியாண்டார் நம்பி வாயில் என அழைக்கப்படும் வரலாற்று சிறப்புமிக்க அருள்மிகு சிவகாமி உடனாய திருத்தளிநாதர் ஆலயத்தில் வைகாசி விசாக பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. 

தொடர்ந்து சிவாச்சாரியாருக்கும், கொடி மரத்திற்கும் காப்பு கட்டப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. அதனை அடுத்து கல் மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமிகளுக்கு பூஜைகளை நடைபெற்று தீப ஆராதனை காட்டப்பட்டது. இதில் திருப்பத்தூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். பத்து நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக 4ஆம் நாள் திருத்தளிநாதற்கு மஞ்சள் நீராட்டு விழாவும், 5ஆம் நாள் திருக்கல்யாண வைபவமும், 9ஆம் நாள் திருத்தேரோட்டமும், 10ஆம் நாள் தெப்ப உற்சவமும் நடைபெறும். 

இதே போல சோளிங்கரில் 1100 ஆண்டு பழமை வாய்ந்த சோழபுரீஸ்வரர் திருக்கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ தேர் திருவிழா வெகு விமர்சையாக கொடியேறுத்துடன் துவங்கியது‌ திரளான கலந்து கொண்டனர். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பஜார் பகுதியில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ கனககுஜம்பாள் சமேத சோழபுரீஸ்வரர் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன்  வெகு விமர்சையாக தொடங்கியது. 

இதனை முன்னிட்டு சோழபுரீஸ்வரர் கனககுதம்பாள் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து  உற்சவ ஸ்வாமி சுந்தரேஸ்வரர் பார்வதி கங்கா தேவி சுவாமி முன்னிலையில் கலச பூஜை செய்து   கொடி மரத்திற்கு புனித நீரூற்றி தீபாராதனை நடைபெற்றது. 

மங்கள வாத்தியங்கள் முழங்க கொடி மரத்தில் திரிசூலம் நந்தி உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டு சிறப்பு பூஜை செய்து கும்ப தீபார நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பத்து நாள் உற்சவத்தில் ஒவ்வொரு நாளும் சுவாமி ஊர் வாகனத்தில் எழுந்த வழி மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தந்து அருள் பாலிப்பார். இதில் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவம், தேர் திருவிழா என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow