"இவர்தான்டா அழகர்! நல்லா பாரு என்றார் அப்பா... மறக்க முடியாத நாள்” - நடிகர் சூரி நெகிழ்ச்சிப் பதிவு
அழகரை இவ்வளவு அருகில் பார்ப்பது பேரானந்தம்! நம்ம கள்ளழகர் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் - சூரி
மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிய நிகழ்வை நேரில் பார்த்த நடிகர் சூரி, மறக்க முடியாத நாள் என்று நெகிழ்ச்சிப் பதிவை தனது X தளத்தில் வெளியிட்டுள்ளார்.
சினிமாவில் காமெடி நடிகர்கள் வரிசையில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பிடித்திருப்பவர் நடிகர் சூரி. ஆரம்பத்தில் சில சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும், வெண்ணிலா கபடிக் குழு திரைப்படத்தில் வரும் பரோட்டா காமெடிக்குப் பிறகு பரோட்டா சூரி என்று பரவலாக அறியப்பட்டார். அதன் பின்னர் பல திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களும், முக்கிய குணச்சித்திர நடிகராகவும் வலம் நடித்த சூரி, விடுதலை திரைப்படத்தின் மூலம் கதாநாயகன் ஆனார்.
தற்போது விடுதலை இரண்டாம் பாகம், கருடன் ஆகிய திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர், மதுரையை பூர்வீகமாகாக கொண்டவர் என்பதால், ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழாவில் கலந்து கொள்வது வழக்கம். இந்த ஆண்டு சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தில் நடிகர் சூரி கலந்துகொண்டார்.
வைகை ஆற்றில் இறங்குவதற்காக அழகர் மலையில் இருந்து புறப்பட்ட கள்ளழகர், நூற்றுக்கணக்கான மண்டகப்படிகளை ஏற்றுக் கொண்டபடி நேற்று (ஏப்ரல் 22) மதுரை தல்லாகுளம் பெருமாள் கோயிலில் தங்கினார். அப்போது அவரை தரிசனம் செய்ய நடிகர் சூரி வருகை தந்தார். கள்ளழகருக்கு அணிவிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த மாலைகளை நடிகர் சூரி தொட்டு வணங்கினார். அப்போது அங்கிருந்தவர்கள் சூரியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
பின்னர் இன்று காலை வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகரை அருகில் சென்று நடிகர் சூரி தரிசித்தார். பக்திப் பரவசத்துடன் சூரி தரிசனம் செய்த நிலையில், தனது X தள பக்கத்தில் இது தொடர்பான நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது சிறு வயது ஞாபகங்களை நினைவுகூர்ந்து பதிவிட்டிருக்கும் சூரி, வாழ்வில் மறக்க முடியாத நாள் என்று பதிவிட்டுள்ளார். அழகரை இவ்வளவு அருகில் பார்ப்பது பேரானந்தம் என்று கூறியுள்ள சூரி, நம்ம கள்ளழகர் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அரை டவுசர் வயதில் அப்பாவின் தோள் மீது உட்கார்ந்து , முதன்முதலில் அழகரை பார்த்தேன். "இவர்தான்டா அழகர்..நல்லா பாரு" என்றார் அப்பா... மறக்க முடியாத நாள் அது... அதுக்கப்புறம் இப்போது தான் இவ்வளவு அருகில் அழகரை பார்க்கிறேன் .. பேரானந்தம்.. நம்ம கள்ளழகர் அருள் அனைவருக்கும்… pic.twitter.com/yJ8bKmN5Gw — Actor Soori (@sooriofficial) April 23, 2024
What's Your Reaction?