போதையின் பாதையில் தமிழகம்.. தடுக்க தவறிய அரசு.. Say No to drugs உறுதி ஏற்க சொன்ன விஜய்
இளைஞர்கள் போதை பொருட்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்த ஆளும் அரசு தவறி விட்டது என்று நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைருமான விஜய் கூறியுள்ளார். எக்காரணம் கொண்டும் போதையின் பக்கம் செல்ல வேண்டாம் என்றும் நடிகர் விஜய் கூறியுள்ளார்.
நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய் தலைமையில் 2வது ஆண்டு கல்வி விருது வழங்கும் விழா சென்னை, திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் இன்று நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டு 10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கினார் விஜய். அப்போது விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று மாணவ மாணவிகள் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்தார் விஜய். கட்சி பெயரை தமிழக வெற்றிக்கழகம் என்று அறிவித்து அதனை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார்.
நடப்பாண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக முதல் 3 இடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு விஜய் பாராட்டு விழா நடத்துகிறார். இன்று நடக்கும் நிகழ்ச்சியில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, அரியலூர், கோயம்புத்தூர், இராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை, ஈரோடு, தேனி, தர்மபுரி, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி,சேலம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது.
விஜய் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் விழா என்பதால் இந்த விழாவில் விஜய் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. விழா நடைபெறும் இடத்திற்கு வந்த விஜய்க்கு மாணவரின் தாயார் ஒருவர் செந்தூரம் வைத்து வாழ்த்து கூறினார். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி மாணவர் சின்னதுரையின் அருகில் அமர்ந்தார் விஜய்.
மாணவர்கள் மத்தியில் பேசிய விஜய், நன்றாக படிக்க வேண்டும் என்று வழக்கமான பேச்சை தொடங்கினார்.படித்தவர்கள் அரசியலுக்கு வருவதில் தவறில்லை என்று சொன்னார். படிக்கும் காலத்தில் இருந்தே அரசியல் தொடங்கி விடுகிறது. ஒரு செய்தியை எப்படி அணுக வேண்டும் என்றும் ஆலோசனை கூறினார் விஜய்.
இதனையடுத்து தமிழ்நாட்டில் போதை பொருள் பயன்பாடு அதிகரித்து விட்டதாக கூறிய விஜய் அதை நினைக்கும் போதே பயமாக இருப்பதாக தெரிவித்தார்.
போதை பொருட்களை கட்டுப்படுத்துவது அரசின் கடமை. இளைஞர்கள் போதை பொருட்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்த ஆளும் அரசு தவறி விட்டது
எக்காரணம் கொண்டும் போதையின் பக்கம் செல்ல வேண்டாம் என்று சொன்ன விஜய், say no to drugs என்று சொல்லி உறுதி மொழி ஏற்கச் சொன்னார்.
இதனையடுத்து மாணவ மாணவிகளுக்கு வைரத்தோடு, வைர மோதிரம் வழங்கி சால்வை அணிவித்து சான்றிதழ் வழங்கி புகைப்படங்களை எடுத்துக்கொண்டார் விஜய்.சாதிய பிரச்சினையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரைக்கும் பரிசு வழங்கி சால்வை அணிவித்து சான்றிதழ் வழங்கினார் விஜய்.
What's Your Reaction?