T20 World Cup: இங்கிலாந்தை அசுர வதம் செய்த இந்தியா... பைனலில் தென்னாப்பிரிக்காவுடன் பலப்பரீட்சை!

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில்,இந்திய அணி அபாரமாக வெற்றிப் பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

Jun 28, 2024 - 10:46
T20 World Cup: இங்கிலாந்தை அசுர வதம் செய்த இந்தியா... பைனலில் தென்னாப்பிரிக்காவுடன் பலப்பரீட்சை!

கயானா: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதின. கயானாவில் தொடர்ந்து மழை பெய்ததன் காரணத்தால் சில மணி நேரங்கள் தாமதமாக போட்டி தொடங்கியது. டாஸில் வெற்றிப் பெற்ற இங்கிலாந்து, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இந்தத் தொடர் முழுவதும் பேட்டிங்கில் சொதப்பி வரும் விராட் கோலி, இப்போட்டியில் அசத்துவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். 

அதேபோல், இரண்டாவது ஓவரின் இரண்டாவது பந்தில் அட்டகாசமாக ஒரு சிக்சர் அடித்து மிரட்டினார் கோலி. இதனால் கோலியின் அதிரடி தொடரும் என காத்திருந்த ரசிகர்களுக்கு அதே ஓவரில் அதிர்ச்சிக் கொடுத்து வெளியேறினார். டாப்லே வீசிய பந்தில் போல்டான கோலி 10 பந்துகளில் 9 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். இன்னொரு பக்கம் கேப்டன் ரோஹித் சர்மா, நிலைத்து நின்று ஆடியதுடன் அதிரடியாகவும் ரன்களை குவித்தார். அதேநேரம் கோலியை தொடர்ந்து களமிறங்கிய ரிஷப் பண்ட் 4 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் ரோஹித் சர்மாவுடன் சிறப்பான பாட்னர்ஷிப் அமைத்தார்.

ரோஹித் சர்மா 39 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து அவுட்டாக, சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். அதற்கு அடுத்து களமிறங்கியவர்களில் ஹர்த்திக் பாண்டியா 23 ரன்களும், ஜடேஜா 17 ரன்களும் எடுத்தனர். இறுதியாக இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியில், ஜோஸ் பட்லர் மட்டும் ஆரம்பத்தில் அதிரடி காட்டினார். அதன்படி 15 பந்துகளில் 23 ரன்கள் எடுத்த ஜோஸ் பட்லர், அக்ஷர் பட்டேல் பந்தில் ரிஷப் பண்ட் இடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.  
அதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்ய வந்த இங்கிலாந்து வீரர்களும் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் திணறினர். இன்னொரு ஓப்பனரான சால்ட் விக்கெட்டை பும்ரா அவுட் செய்ய, மொயின் அலி, ஜானி பாரிஸ்டோ ஆகியோரின் விக்கெட்டுகளை அக்ஷர் பட்டேல் வீழ்த்தினார். ஹாரி ப்ரூக் 25 ரன்களும், கடைசி கட்டத்தில் களமிறங்கிய ஆர்ச்சர் 21 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி 16.4 ஓவர்களில் 103 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இந்திய அணி இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ளவுள்ளது. 2007ம் ஆண்டு நடைபெற்ற முதல் உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா, அதன்பின்னர் 2014ல் ரன்னர் அப் ஆனது. இதனையடுத்து தற்போது மூன்றாவது முறையாக பைனல் சென்றுள்ளது இந்தியா. அதேநேரம் தென்னாப்பிரிக்கா அணி முதன்முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது முறையாக கோப்பையை வெல்ல இந்திய அணியும், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது சாம்பியன் கனவை நனவாக்க தென்னாப்பிரிக்க அணியும் பைனலில் விடாமல் மோதும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow