பவதாரிணியின் உடல் இன்று அடக்கம் - தேனியில் ஏற்பாடுகள் தீவிரம்

பவதாரிணியின் உடல் தாயார் மற்றும் பாட்டியின் சமாதிகளுக்கு நடுவே அடக்கம் செய்யப்பட உள்ளது

Jan 27, 2024 - 10:51
Jan 27, 2024 - 10:51
பவதாரிணியின் உடல் இன்று அடக்கம் - தேனியில்  ஏற்பாடுகள் தீவிரம்

இசையமைப்பாளர் இளையராஜாவின் தாயார் மற்றும் மனைவி ஆகியோரின் நினைவிடத்தில்  பவதாரிணி உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.

இந்திய திரை உலகின் மிகப் பிரபலமான இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.அவரது உடல் தேனி மாவட்டம் லோயர்கேம்பில் உள்ள இளையராஜாவின் பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட உள்ளது. இதற்காக அவரது உடல் தற்போது சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக லோயர்கேம்ப் கொண்டு செல்லப்பட்டு  பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது

மேலும் இளையராஜா உள்ளிட்ட பவதாரணியின் உறவினர்கள் அனைவரும் சென்னையில் இருந்து சாலை மார்க்கமாகவும், விமானம் மூலமாக மதுரை வந்தும், அங்கிருந்து சாலை மார்க்கமாக லோயர்கேம்ப் நோக்கி முன்கூட்டியே சென்று விட்டனர். இளையராஜாவின் தாயார் சின்னத்தாய் அம்மாள் மற்றும் அவரது மனைவி ஜீவா ஆகியோர் உயிரிழந்த போது அவர்களது உடலும் லோயர் கேம்பில் உள்ள அவரது பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட்டு மணிமண்டபங்களும் கட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில் பவதாரிணியின் உடல் தாயார் மற்றும் பாட்டியின் சமாதிகளுக்கு நடுவே அடக்கம் செய்யப்பட உள்ளது.இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மேலும் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக உறவினர்கள் மற்றும் திரையுலகத்தினர் லோயர்கேம்ப் நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.இதனால் போடி டிஎஸ்பி தலைமையில் நான்கு ஆய்வாளர்கள், பத்துக்கும் மேற்பட்ட சார்பு ஆய்வாளர்கள் உள்ளிட்ட 120க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow