"GST OKதான், அதுக்காக இவ்வளவா..?" - கொந்தளித்த விக்ரமராஜா..!
மதுரையில் மே 5-ம் தேதி விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளதாக அறிவித்துள்ள வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் தலைவர் விக்ரமராஜா, ஜிஎஸ்டி வரிவிதிப்பை ஒருமுனையாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் ஈரோடு மாவட்ட பொதுக்குழு கூட்டம், தண்ணீர்பந்தல் பாளையம் பகுதியில் நடைபெற்றது. அதில், மே 5-ம் தேதியான வணிகர் தினத்தை, அரசு விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட 22 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விக்ரமராஜா, "வணிகர்களின் கோரிக்கையை ஏற்று தேர்தல் நடத்தை விதிமுறைகளை தளர்வு செய்த தேர்தல் ஆணையத்திற்கு நன்றி. மே 5-ம் தேதி மதுரையில் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது. ஜிஎஸ்டி சட்ட விதிகள், உணவு பாதுகாப்புத்துறை சட்ட விதிகள், தொழிலாளர் துறை சட்டவிதிகள் ஆகியவற்றை எதிர்கொள்ளும் நிலைக்கு வியாபாரிகள் தள்ளப்பட்டுள்ளனர். குப்பை வரி, தொழில் வரி, கட்டிட வரி போன்றவற்றின் வரிகள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதை எதிர்கொள்ளும் விதமாகவும், அடிமைப்பட்டு கிடக்கும் வியாபாரிகளை மீட்கும் வகையிலும் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
வியாபாரிகளுக்கான உரிமம் வழங்கும் முறையில் உள்ள இடர்பாடுகளை அகற்றி, அதை ஒற்றைச் சாளர முறையில் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜிஎஸ்டி வரிவிதிப்பு ஒருமுனை ஆக்கப்பட வேண்டும். ஜிஎஸ்டி வரி 7% - 10% வரை மட்டுமே இருக்க வேண்டும். 18% - 28% வரை வரி விதிப்பதை வியாபாரிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆண்டுதோறும் அதிகமான வரி வசூல் செய்து கொடுக்கும் மாநிலங்களில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ள நிலையில், நாம் கொடுக்கும் வரிக்கு ஏற்ப மத்திய அரசு நிதி ஒதுக்கினால் தமிழ்நாடு வளர்ச்சியடையும்.
வணிகள் சங்கங்களின் பேரமைப்பு எப்போதும் அரசியல், சாதி, மதம், மொழி ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டே இயங்குகிறது. வணிகர்களின் உணர்வோடும், உறவோடும் செயல்படும் இயக்கமாக உள்ளது. ஜிஎஸ்டி சட்ட விதிகளில் திருத்தம் செய்து தருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளார்" என தெரிவித்தார்.
What's Your Reaction?