வீட்டில் மயங்கி கிடந்த மாமியார்... மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் மருமகன் செய்த செயல்...

சென்னை மாதவரத்தில் மாமியாரை கட்டையால் அடித்துக் கொலை செய்த மருமகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

Apr 21, 2024 - 18:15
வீட்டில் மயங்கி கிடந்த மாமியார்...  மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் மருமகன் செய்த செயல்...

மாதவரம் தபால் பெட்டி கண்ணன் நகரின் முதல் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் புஷ்பராஜ். இவரது மனைவி ஜான்சி, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்களுடன் ஜான்சியின் தாயார் வசந்தியும் (65) ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். 

 

குடிப்பழக்கம் காரணமாக புஷ்பராஜ், வேலைக்கு ஏதும் செல்லாமல் வீட்டிலேயே இருப்பதால், கணவன் -  மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 21) இரவு சுமார் 9 மணி அளவில் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த புஷ்பராஜுக்கும், அவரது மனைவிக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டதால், புஷ்பராஜ் கோபித்துக்கொண்டு வெளியே சென்றுள்ளார்.

 

மாமியார் வசந்தி தங்களுடன் வீட்டில் வசிப்பதால் தான் பிரச்சினை வருகிறது என எண்ணிய புஷ்பராஜ், மனைவி வெளியே சென்றதும் போதையில் வீட்டுக்கு வந்து, மாமியாரிடம் தகராறு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரத்தில் இருந்த புஷ்பராஜ், திடீரென தனது மாமியாரை வீட்டை விட்டு வெளியே போக சொல்லி கட்டையால் அவரது தலையில் அடித்துள்ளார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு வசந்தி அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.

 

இந்நிலையில், வீட்டுக்கு வந்த ஜான்சி, தாய் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, ஆம்புலன்ஸ் மூலம் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே வசந்தி பரிதாபமாக உயிரிழந்தார்.

 

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மாதவரம் போலீசார், தலைமறைவாக இருந்த புஷ்பராஜை இன்று (ஏப்ரல் 21) காலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுபோதையில் மாமியாரை மருமகன் அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow