ஒட்டுமொத்தமாக தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்.. கருப்புக் கொடி ஏந்தி போராட்டம்.. என்ன காரணம்?
தஞ்சாவூர் அருகே அரசு தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாததற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஒட்டுமொத்தமாக தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் அருகே உள்ள இனாத்துக்கான்பட்டி கிராமம், விமானப்படைத்தளத்தின் பின்புறம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த 35 ஆண்டுகளாக எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை எனக் கூறி, அப்பகுதி மக்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கச் செல்லாமல் ஒட்டுமொத்தமாக புறக்கணித்து, வீடுகள் தோறும் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விமானப்படை தளத்தால் தங்களுடைய நிலம் பறிபோய்விட்டதாகவும், கிராமத்தில் செயல்பட்ட சுகாதார நிலையம், பள்ளிக்கூடம், தபால் நிலையம் என அனைத்தையும் மூடிவிட்டதாகவும் கிராம மக்கள் புகார் தெரிவித்தனர். மேலும் தங்களுக்கு சாலை வசதி, பள்ளிக்கூடம் என எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் அகதிகள் போல் வாழ்ந்து வருவதாகவும் வேதனை தெரிவித்துள்ள கிராம மக்கள், இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டினர்.
இதனால் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாததை கண்டித்து இனாத்துக்கான்பட்டி கிராமத்தில் உள்ள 600 வாக்காளர்களும் ஒட்டுமொத்தமாக தேர்தலை புறக்கணித்துள்ளனர். உள்ளூரில் வாழும் மக்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்யாமல், டெல்லிக்கு போய் என்ன செய்யப்போகிறார்கள் எனவும் கிராம மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
What's Your Reaction?