"நாங்க மாநில அமைச்சர்களாவே இருந்துக்கிறோம்"... கர்நாடகா காங்-க்கு வந்த புதிய சிக்கல் !
நிச்சயமற்ற நிலைக்கு தள்ளப்படுவோம் என்ற அச்சத்தில் கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் பல அமைச்சர்கள் எம்.பி வேட்பாளர் மனு கொடுக்கக் கூட தயங்குவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவைத் தேர்தல் தேதி ஒரு சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பாஜக தலைமையில் NDA கூட்டணிக் கட்சிகளும், மறுபுறம் I.N.D.I.A. கூட்டணிக் கட்சிகளும் அனல்பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் காங்கிரஸ் சமீபத்தில் ஆட்சியைப் பிடித்த கர்நாடகா, அக்கட்சியின் தேசியத்தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் சொந்த மாநிலம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மாநிலத்தில் அதிகாரப் பதவிகளை விட்டுவிட்டு நிச்சயமற்ற சூழலுக்கு தள்ளப்படுவோம் என்ற அச்சத்தில் காங்கிரசின் முக்கியத் தலைவர்கள், மக்களவைத் தேர்தலில் போட்டியிட அஞ்சுவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக சில அமைச்சர்களும், சிட்டிங் எம்.எல்.ஏக்களும் கூட இதற்குத் தயங்குவதாக கூறப்பட்டுள்ளது. மாநிலத்தின் 28 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற நிலையில், அமைச்சர்கள் சதீஷ் ஜார்கிஹோலி, பி.நாகேந்திரா, கிருஷ்ண பைரே கவுடா, கே.எச்.முனியப்பா, எச்.கே.பாட்டீல், ஈஸ்வர் காந்த்ரே, லட்சுமி ஹெபால்கர் உள்ளிட்டோரின் பெயர் இடம்பெற்றுள்ள போதும், அனைவரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட அஞ்சுவதாக கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக மாநில அமைச்சர் ஹெபால்கர், கட்சி அறிவுறுத்தலைத் தாண்டி, தனக்கு பதிலாக தனது மகனை போட்டியிடவைக்க முயல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்றொரு அமைச்சரும் மக்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டவருமான எஸ்.சி.மஹாதேவப்பா, தான் போட்டியிடப் போவதில்லை என வெளிப்படையாகவே அறிவித்தார். மாற்று வேட்பாளரை கட்சி மேலிடம் அறிவிக்கும் பட்சத்தில் அவர்தம் வெற்றிக்கு உழைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், காங்கிரஸ் மேலிடம் கூறுவதே இறுதியானது எனவும் அதனை யாரும் மறுக்க முடியாது எனவும் துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். மேலிட முடிவுகளை எந்தக் கேள்விகளுமின்றி, தானாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்...
2019 மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை பாஜக 25 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும், தற்போது பாஜகவுடன் கூட்டணியில் உள்ள குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஒரு இடத்திலும் வெற்றிபெற்றது. பாஜக ஆதரவுடன் ஒரு சுயேட்சை வேட்பாளர் தேர்வானதும் குறிப்பிடத்தக்கது. 2024 மக்களவைத் தேர்தலையொட்டி, நாட்டின் பல மாநிலங்களில் பாஜக குதிரைப் பேரத்தில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், கர்நாடகாவின் ஆளும் காங்கிரசின் பிரச்னை வேறுகோணத்தில் உருவெடுத்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன.
What's Your Reaction?