நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் தான் நிற்போம்.. ஓபிஎஸ் உறுதி..
புதுக்கோட்டையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் தான் நிற்போம் என உறுதி அளித்தார் ஓபிஎஸ்.
புதுக்கோட்டையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நாடாளுமன்ற தேர்தலுக்காக கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் ஓபிஎஸ், நாடாளுமன்ற தேர்தலில் உறுதியாக இரட்டை இலை சின்னத்தில் தான் நிற்போம். அதுமட்டுமில்லாமல் வரும் தேர்தலிலும் மோடிதான் ஆட்சிக்கு வர வேண்டும்.அவர் பத்தாண்டு காலம் சிறப்பாக ஆட்சி செய்துள்ளார். வரும் தேர்தலுக்காக ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஒன்றிணைய வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் விரும்புகின்றனர்.
கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தபோது தர்மயுத்தம் நடத்திக் கொண்டிருந்தோம். அதற்காக அப்போது கண்டன அறிக்கையும் விட்டிருந்தோம். அப்போது எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்ததால் அவரை உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் உரிமைகளை மீட்கின்ற குழுவாக எங்கள் குழு வெற்றி பெறும். எங்களுக்கு இருக்கும் ஆதங்கம் எடப்பாடி பழனிச்சாமிக்கு இல்லை. நாங்கள் சொல்வதை கேட்கவில்லை. அவர் கனவு உலகத்தில் மிதந்து கொண்டிருந்தால் நாங்கள் என்ன செய்ய முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
எங்கள் தலைமையில் உள்ள உரிமை மீட்புக் குழுவில் உள்ள தொண்டர்கள் பொதுமக்கள் பாஜகவுக்கு தான் வாக்களிப்பார்கள். ஐந்து இடங்களா 10 இடங்களா முப்பது இடங்களா என்று சொல்லிவிட்டு தான் கேட்க போகிறோம்.
எடப்பாடி பழனிச்சாமி 2 கோடி தொண்டர்கள் அதிமுகவில் உள்ளதாக கூறுவது சுத்த பொய். வாக்காளர் பட்டியலை கையில் வைத்துக்கொண்டு படிவம் எழுதி பூர்த்தி செய்தால் எப்படி உறுப்பினர்களாக சேர்க்க முடியும் என கூறியுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் பதவி மட்டுமே சட்டமன்ற விதிகளின்படி உள்ளது எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி என்பது விதியின் படி கிடையாது, அதனால் தற்பொழுது நான் அந்த பதவியும் இல்லை. சட்டமன்றத்தில் தனக்கு தரப்பட்டுள்ள இருக்கை முன்னாள் முதலமைச்சர் என்ற அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, அதிமுக வேட்டியை கட்ட முடியவில்லை என்ற மன வருத்தம் உள்ளது தான். 45 ஆண்டுகள் இந்த இயக்கத்தில் அடிப்படை உறுப்பினராக இருந்து வந்துள்ளேன். விஸ்வாசத்திற்கு எந்த நிலையில் இருந்து ஒரு தொண்டன் பாடுபட வேண்டுமோ அந்த நிலையில் இருந்து தான் கட்சிக்காக பாடுபட்டேன். தலைவர் என்ற நிலையில் இல்லை, தொண்டன் என்ற நிலையிலேயே இருந்தேன். அனைத்து பதவிகளும் ஜெயலலிதா பார்த்து கொடுத்தது தான். நானாக குறுக்கு வழியில் சென்று எந்த பதவியையும் பெறவில்லை என கூறினார்.
இன்று இருக்கக்கூடிய சூழல் யாரை எதிர்த்து தர்ம யுத்தம் நடத்தினோமோ அவர்கள் அனைவரும் மனம் விட்டு அதிமுக தான் முக்கியம் என்ற நிலைப்பாட்டிற்கு வந்துள்ளோம். நாடாளுமன்ற தேர்தலில் உறுதியாக இரட்டை இலை சின்னத்தில் தான் நிற்போம் என உறுதி அளித்துள்ளார் ஓபிஎஸ். இரட்டை இலை சின்னம் கிடைக்காது என்ற நிலை வரும் பொழுது அந்த சூழலில் எந்த சின்னத்தில் நிற்பது என்று பார்த்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?