ஈவிகேஎஸ் இளங்கோவன்- கடந்த வந்த அரசியல் பாதை
நடிகர் சிவாஜி கணேசனின் ரசிகரான இளங்கோவன், தனது அரசியல் குருவாகவும் சிவாஜி கணேசனையே ஏற்றிருந்தார்.
                                தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் (75)உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.எல்.ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை கடந்த மாதம் மோசமடைந்தது. மூச்சு திணறல் காரணமாக சென்னை அடுத்த ராமாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், கடந்த மாத இறுதியில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், அவரது உடல்நிலை மீண்டும் மோசமடைந்துள்ளதாக இன்று காலை தகவல் வெளியானது. இதையடுத்து அவர் விரைந்து குணமடைந்து மீண்டும் இயல்பு வாழ்கைக்கு திரும்ப வேண்டும் என, காங்கிரஸ் கட்சியினர் விருப்பம் தெரிவித்து வந்தனர். தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை (டிச.14) சுமார் 10.12 மணியளவில் காலமானார். அவரது மறைவு காங்கிரஸ் கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த 1948ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி ஈரோட்டில் பிறந்தவர். சென்னை மாநில கல்லூரியில் பி. ஏ. பொருளாதாரம் பட்டம் பெற்றார். இளம் வயதிலேயே காங்கிரஸ் கட்சியில் இணைந்து தீவிர களப்பணியாற்றினார். படிப்படியாக உயர்ந்து இரண்டு முறை காங்கிரஸ் மாநில தலைவர் பதவியை வகித்துள்ளார். பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியில் மத்திய ஜவுளிதுறை இணை அமைச்சராகவும் பதவியேற்றார்.
பெரியாரின் பேரன், ஈ.வெ.கி.சம்பத்தின் மகன் என்ற அடையாளங்களுடன் அரசியலுக்குள் நுழைந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் 1984-ல் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடிப்படையில் நடிகர் சிவாஜி கணேசனின் ரசிகரான இளங்கோவன், தனது அரசியல் குருவாகவும் சிவாஜி கணேசனையே ஏற்றிருந்தார். அந்த அடிப்படையில், 1984ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் சிவாஜி கணேசனின் பரிந்துரையால் சத்தியமங்கலம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன், திமுக வேட்பாளரைவிட இருமடங்கு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
எம்ஜிஆரின் மரணத்தைத் தொடந்து, அவரது மனைவி ஜானகி முதலமைச்சரானார். அவரது தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழலில், காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்க மறுத்தது. குறிப்பாக, பிரதமரும் அகில இந்திய காங்கிரஸ் தலைவருமான ராஜீவ் காந்தி ஒருங்கிணைந்த அதிமுகவையே ஆதரிப்போம் என்று தெரிவித்தார். இதனால் காங்கிரஸ் கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் முளைத்தன.
குறிப்பாக, ஜானகி அரசுக்கு ஆதரவாக காங்கிரஸ் வாக்களிக்க வேண்டுமென்று கோரினார் நடிகர் சிவாஜி. ஆனால், அதற்கு காங்கிரஸ் தலைமை சம்மதிக்காத நிலையில், சிவாஜி ஆதரவு எம்.எல்.ஏக்கள் பதவி விலகுவதாக அறிவித்தனர். அப்படி அறிவித்த சிவாஜி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுள் ஈவிகேஎஸ் இளங்கோவன் முக்கியமானவர். பிறகு காங்கிரஸிலிருந்து விலகி , தமிழக முன்னேற்ற முன்னணியைத் தொடங்கிய சிவாஜி, அதிமுக ஜானகி அணியுடன் கூட்டணி அமைத்து 1989 சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்தார். அப்போது, தமிழக முன்னேற்ற முன்னணி வேட்பாளராக பவானிசாகர் தொகுதியில் போட்டியிட்டார் ஈவிகேஎஸ் இளங்கோவன். அந்தத் தேர்தலில் இளங்கோவனுக்கு நான்காம் இடமே கிடைத்தது. அதன்பிறகு பலமுறை மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்டு, வெற்றி தோல்விகளைப் பெற்றிருந்த போதும், எந்தவொரு சட்டமன்றத் தேர்தலிலும் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டதில்லை.
சட்டமன்ற உறுப்பினராக இருந்த தனது மகன் திருமகன் ஈவெராவின் அகால மரணத்தால், அந்த வாய்ப்பு அவருக்கு வந்திருந்தது என்றாலும், பொதுவாழ்க்கையில் எல்லாவற்றையும் எதிர்கொள்ளத்தான் வேண்டும் என்ற அடிப்படையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் களம் கண்டார் ஈவிகேஎஸ் இளங்கோவன். ஈரோடு கிழக்குத் தொகுதியில் நின்று எம்.எல்.ஏ.வாக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் இன்று மணப்பாக்கத்தில் உள்ள இல்லத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அதன் பின்னர் நாளை சென்னை சத்திய மூர்த்தி பவனில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. முன்னதாக ஈவிகேஎஸ் இளங்கோவனின் மறைவையொட்டி தமிழக காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் கட்சிக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. ஈவிகேஎஸ் இளங்கோவனின் மறைவு காங்கிரஸ் தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                

                                                                                                                                            
                                                                                                                                            
                                                                                                                                            