ஊழல் செய்துவிட்டு சிறையில் இருந்து வெளியில் வந்தால் தியாகிகளாக? - தமிழிசை காட்டம்!
ஊழல் செய்துவிட்டு சிறையில் இருந்து வெளியில் வந்தால் தியாகிகளாக மாறிவிடுகிறார்கள் என்று தமிழிசை சௌந்தர்ராஜன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடி செய்ததாக அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, கடந்த ஓராண்டுக்கு மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். ஜாமின் கோரி அவர் தாக்கல் செய்த மனுக்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன்பின்னர் சென்னை உயர்நீதிமன்றமும் தொடர்ச்சியாக தள்ளுபடி செய்திருந்தது. பலமுறை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு மீதான வாதங்கள் நிறைவடைந்த நிலையில் கடந்த மாதம் தீர்ப்புக்காக இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, உச்சநீதிமன்ற அமர்வு செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து, 471 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த செந்தில் பாலாஜி வெளியே வந்தார். தொண்டர்களும், அவரது ஆதரவாளர்களும் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடி வரவேற்றனர்.
இந்த நிலையில், செந்தில்பாலாஜியை தியாகி போல் வரவேற்கிறார்களே என்று தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.
சி.பா ஆதித்தனாரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் அவரது திருவுருவ படத்துக்கு முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “தமிழகத்தில் ஊழல் செய்து விட்டு சிறையில் இருந்து வெளியில் வந்தால் தியாகிகளாக மாறி விடுகிறார்கள். இன்று காலை அவருடன் செல்பி எடுக்கிறார்களாம். இதை எங்கே போய் சொல்வது? ஜாமீன் தான் கிடைத்திருக்கிறது. விடுதலை ஆனது போல் கொண்டாடுகிறார்கள்.
எல்லாவற்றுக்கும் மேல் பொய் வழக்கில் இருந்து விடுதலை ஆவேன் என்று சொல்கிறார். செந்தில் பாலாஜி யாரை சொல்கிறார்? பொய் வழக்கு போட்டது தமிழக முதலமைச்சர் என்று சொல்கிறாரா? இதை தெரிந்து கொண்டே முதலமைச்சரும், தான் போட்ட வழக்கை தானே பலமுறை குற்றம் சாட்டியவர் என்று இல்லாமல், அவரை தியாகி போல் முன்னிறுத்துவது மிக வேடிக்கையான ஒன்று” என்று தெரிவித்தார்.
What's Your Reaction?