“யாருங்க சொன்னது” திமுக தவிர நாங்க யாருக்கிட்டையும் பேசல: காங்கிரஸ் கிரிஷ் சோடங்கர்
“தவெக உடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக வரும் தகவல் வதந்தி. திமுகவுடன் மட்டுமே கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்” என காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்தார்.
சென்னை சத்திய மூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையுடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், ”தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. “தவெக உடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்துவதாக வரும் தகவல் வதந்தி. திமுகவுடன் மட்டுமே கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம்.
முதலமைச்சரை ஒரு மாதத்திற்கு முன்னரே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம்.கூட்டணி தொடர்பாக எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. கூட்டணி தொடர்பாக தி.மு.க.வுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.”திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை முன்கூட்டியே தொடங்கி சுமுகமாக நடைபெற்று வருகிறது. திமுகவுடனான தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தையை விரைவில் இறுதி செய்வோம்.
திமுகவிடம் காங்கிரஸ் 38 தொகுதிகள் கேட்டதாக கூறியது யார்? திமுக கூட்டணியில் காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பதை விரைவில் அறிவிப்போம்.திமுக - காங்கிரஸ் கூட்டணி நம்பகத்தன்மை வாய்ந்தது. எந்தக் கட்சியாக இருந்தாலும் ஆட்சி அதிகாரத்தை விரும்பும். எம்.பி ஜோதிமணி கூறிய புகார் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. அதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுப்போம்.
சட்டப்பேரவை தேர்தலுக்காக காங்கிரஸ் சார்பில் 5 ஆயிரம் விருப்ப மனுக்களை வாங்கியுள்ளோம். மதிமுக நடத்திய நடைபயண தொடக்க விழாவில் கலந்து கொள்ளாதது எங்கள் கட்சியின் முடிவு. அதுபற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை” இவ்வாறு அவர் கூறினார்.
What's Your Reaction?

