மாணவர்கள் 100% கல்லூரி படிப்பை முடிக்க திருவாரூர் ஆட்சியர் வலியுறுத்தல்

100% கல்லூரி படிப்பு படிக்க வேண்டும் என மாணவர்கள் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்

மாணவர்கள் 100% கல்லூரி படிப்பை முடிக்க திருவாரூர் ஆட்சியர் வலியுறுத்தல்

பள்ளி முடித்து கல்லூரி படிக்கும் மாணவர்கள் விகிதம்  தமிழகத்தில் 50% ஆக உள்ளது. நமக்கு இது பத்தாது, 100 விழுக்காடு கல்லூரி படிப்பை மாணவர்கள் பயில வேண்டும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் பேசியுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தலைமையில் நடைபெற்றது. இதில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ கலந்து கொண்டு கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 292 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கினார்.

2023-2024ஆம் கல்வியாண்டில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 91 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 10 ஆயிரத்து 712 மாணவ மாணவிகளுக்கு 5 கோடியே 16 லட்சத்து 58 ஆயிரத்து 600 ரூபாய் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதில் முதற்கட்டமாக கொரடாச்சேரி ஒன்றியத்தில் உள்ள இரண்டு பள்ளிகளை சேர்ந்த 110 மாணவர்கள் மற்றும் 182 மாணவிகள் என மொத்தம் 292 மாணவ மாணவிகளுக்கு 14, 05,320 மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

 விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ பேசியதாவது, “ பள்ளி படிப்பு முடித்து கல்லூரி படிப்பு படிக்கும் மாணவர்களின் விழுக்காடு இந்திய அளவில் 21 சதவீதம் மட்டுமே.அதில் தமிழகத்தில் விழுக்காடு 50 சதவீதம்.அதாவது 100 மாணவர்கள் பள்ளி பயின்றால் அதில் 50 மாணவர்கள் மட்டுமே கல்லூரி படிப்பு படிக்கின்றனர்.தேசிய அளவில் ஒப்பிடும்போது நாம் அதிகமாக இருந்தாலும் இது பத்தாது. பள்ளி படிக்கும் மாணவர்கள் 100% கல்லூரி படிப்பு படிக்க வேண்டும் என மாணவர்கள் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என மாணவ, மாணவிகள் மத்தியில் உற்சாக உரையாற்றினார்.
 
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, மாவட்ட ஊராட்சி துணை தலைவர் சேகர் கலியபெருமாள், கொரடாச்சேரி ஒன்றிய தலைவர் உமாபிரியா பாலச்சந்தர்,  கொரடாச்சேரி ஒன்றிய துணை பெருந்தலைவர் பாலச்சந்தர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, மாவட்ட கல்வி அலுவலர் மாதவன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow