வாக்குப்பதிவு நாளன்று சதவீதக் குளறுபடி ஏற்பட்டது ஏன்? சத்யபிரதா சாகு விளக்கம்..
வாக்குப்பதிவு நாளன்று சதவீதக் குளறுபடி ஏற்பட்டது ஏன் என்பது தொடர்பாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, உள்மாவட்டங்களில் பறக்கும் படை விலகிக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அப்பகுதிகளில் ரூ.50,000க்கும் மேல் மக்கள் பணத்தை எடுத்துச் செல்லலாம் எனவும் கூறினார். ஆனால் அண்டை மாநிலங்களை ஒட்டியுள்ள தமிழ்நாடு எல்லைப் பகுதிகளில் ரூ.50,000-க்கு மேல் எடுத்துச் சென்றால் உடனடியாக பறிமுதல் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
அதன்படி தமிழ்நாடு எல்லை மாவட்டங்களான திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி, தேனி மாவட்டங்களில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபடுவர் எனவும் அவர் கூறினார். ஏப்ரல் 20ம் தேதி வரை ரூ.1,308 கோடி பணம் பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வாராவாரம் அரசியல் கட்சிகளுடன் நடத்தும் வாக்காளர் பட்டியல் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் முகவர்கள் பட்டியல் தொடர்பான சந்தேகங்களுக்கு பதிலளிக்கப்படும் எனவும் அவர் கூறினார். வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்கவும் சரிபார்க்கவும் தொடர்ந்து பல்வேறு வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருவதாகவும் ஒருவேளை வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்நீக்கம் செய்யப்பட்டால் எளிதில் பெயரை சேர்க்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
வாக்குப்பதிவு நாளன்று செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில் சதவீதம் கணக்கிட்டதால் தவறு நடைபெற்றதாகவும் சத்யபிரதா சாகு விளக்கமளித்தார். செயலியில் அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களும் கட்டாயமாக அப்டேட் செய்ய வேண்டும் என்ற எந்த உத்தரவும் இல்லாத நிலையில், ஒரு சிலர் மட்டுமே அப்டேட் செய்ததால் சதவீத குளறுபடி ஏற்பட்டதாகவும் அவர் கூறினார். தேர்தல் நடத்தும் அதிகாரி கையெழுத்து போட்டு கொடுக்கும் தகவல் கால தாமதம் ஆகும் என்பதால், செயலி மூலம் மீடியாவுக்கு அப்டேட் செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.
What's Your Reaction?