பெண் பிள்ளைகள் எப்போது வயதுக்கு வருவார்கள்?

8 வயதில் பெண் பிள்ளைகள் வயதுக்கு வந்தால் அது  ‘நார்மலா’ என்பதை உறுதி செய்ய, உடனடியாக  குழந்தைகளுக்கான எண்டோகிரைனாலஜிஸ்ட்  சந்திப்பு அவசியம் என்கிறார்.

பெண் பிள்ளைகள் எப்போது வயதுக்கு வருவார்கள்?
When do girls come of age?

ஜெமினி தனா

தமிழ்நாட்டில் விரல்விட்டு எண்ணக்கூடிய குழந்தைகளுக்கான எண்டோகிரைனாலஜிஸ்ட்  மருத்துவர்  சுவாதி பத்மநாபன். சிறிய வயது பெண் பிள்ளைகள் பெரியமனுஷியாவது நல்லதா?  அதனால் உடலுக்கு ஏதேனும் பாதிப்புகள் வருமா? எந்த வயதில் பெண் பிள்ளைகள் வயதுக்கு வரவேண்டும்? என்ற பல கேள்விகளுடன் அவரை அணுகினோம்.

சீக்கிரம் வயதுக்கு வருவது அதிகரித்துள்ளதா?

சமீப வருடங்களாகவே அதிகரித்துவருகிறது. 8 வயதிற்கு முன்பாகவே ( 3 வயது குழந்தை) பருவமடைந்துவிட்ட குழந்தைகளை என்னிடம் அழைத்து வருகிறார்கள். சில நேரங்களில் மருத்துவ காரணங்கள் இல்லாமல் குழந்தை ஆரோக்கியமாக  இருந்து இளவயதில் வயதுக்கு வந்தாலும்,முதல் மாதவிடாய் வரும்போது, எண்டோகிரைனாலாஜிஸ்ட் ( உட்சுரப்பியல்)  ஹார்மொன் சுரப்பு பற்றி அறியும் நிபுணர்களை அணுகி, அந்தப் பெண் பிள்ளையின் உடல் செயல்பாடு சீராக உள்ளதா என்பதை பெற்றோர்கள் அறிந்து கொள்வது அவசியம். சில நேரங்களில் பெண்குழந்தைகளிடம் அதற்கான அறிகுறி தெரியும்போதே அலட்சியம் செய்யாமல் மருத்துவரை அணுகிவிட வேண்டும். 

வயதுக்கு வருவது எப்போது நார்மல்?

பெண் குழந்தைக்கு பிறந்த இரண்டு வாரங்களில் தொடங்கி ஆறுமாதங்கள் வரை ஹார்மோன் சுரப்பு  வேகமாக இருக்கும். அது ‘mini puberty’ என்று சொல்வதுண்டு. அதன் பிறகு  ஒரு வயது முதல் 8 வயது வரை உடலில் பாலியல் ஹார்மோன்கள் செயல்படாமல் அடங்கிவிடும். அதன் பிறகு 8 வயதுக்கு மேல் மீண்டும் உடலில் ஹார்மோன் சுரப்புகள் சீராக வேலை செய்து, உச்சத்துக்கு போகும் போது பருவமடைதல் அதாவது பூப்படைதல் உண்டாகும். இதன்  சரியான அறிகுறிகளாக முதலில் மார்பு வளர்ச்சி இருக்கும், பிறகு அக்குளில் முடி வளரும். இறுதியாக அந்தரங்க உறுப்பில் முடி வளரும். பிறகு தான் மாதவிடாய் உதிரப்போக்கு வரும். இவை தான் நார்மலான பருவமடைதல். ஆனால் தற்போது பருவமடைதலுக்கான வயது 12- லிருந்து, படிப்படியாக குறைந்து 8 வயதிலேயே பருவம் அடைவதைப் பார்க்கமுடிகிறது. 

சீக்கிரம் வயதுக்கு வர என்ன காரணம்?

இதற்குப் பல காரணங்கள் உண்டு. வாழ்க்கை முறை காரணங்கள், அதிக கலோரி கொண்ட உணவுகளை சாப்பிடுவது, செயற்கை கலர் சேர்த்த உணவுகளை உணவில் சேர்ப்பது, சுற்றுப்புற சூழலில் இருக்கும் இராசயனங்கள் உடலுக்குள் ஹர்மோன் மாற்றங்களை உண்டு செய்வது, உணவுப்பொருள்களில் இருக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகள், பிளாஸ்டிக் , நான்ஸ்டிக்  தவா, ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகரிக்கும் லாவெண்டர் எசன்ஷியல் ஆயில் எனப் பலவற்றைச் சொல்லலாம்.

மருத்துவ ரீதியாக  சொல்வதென்றால், பொதுவாக  மூளையில் சுரக்கும் பாலியல் ஹார்மோன் ஆனது,  சினைப்பைக்கு சென்று அங்கு   ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை சுரக்க வைக்கும்.அதனால் மூளையில் சுரப்பது அதிகமா அல்லது  சினைப்பையில் ஹார்மோன் சுரப்பு அதிகமா என்பதை  பரிசோதிக்க வேண்டும். அதே போன்று  தைராய்டு  சுரப்பு,  metrinal brain syndrome,மரபணு காரணங்கள், மூளைக் காய்ச்சல், மூளையில் கட்டி இருந்து ரேடியேஷன் கொடுப்பது போன்ற காரணங்களால் குழந்தைகள் அவர்களின் 8 வயதிலேயே பருவமடைகிறார்கள்.  சில நிலைகளில் அவர்கள் பருவ வயதை அடைந்தும் பருவம் ஆகாமல் இருக்கலாம். 

சீக்கிரம் வயதுக்கு வந்தால்  உடல் ஆரோக்கியம் பாதிக்குமா?

 8 வயது குழந்தை வயதுக்கு வந்தால் அவர்களுக்கு மாதவிடாய் பற்றிய புரிதல் இருக்காது. சில நேரங்களில்  மூளை பாதிப்பினாலும் இருக்கலாம். மூளையில் புற்றுக்கட்டி, புற்று அல்லாத கட்டி இருக்கலாம். இவர்களுக்கு உடனடி சிகிச்சை தேவை.அதனால் காரணங்கள் என்ன என்பதை அறிந்து அதற்கு சிகிச்சை அளிக்கும் போது அபாயம் இருந்தால் அவற்றை சரிசெய்யலாம்.

இவர்களுக்கு முதல் மாதவிடாய் சுழற்சி வந்த உடனேயே சிகிச்சை அளிக்க வேண்டும். அதோடு அவர்கள் வளரும் போது, அவர்களின்  உயரம் 2 முதல் 5 செமீ வரை மட்டுமே இருக்கும். அதுவரை நல்ல உயரத்தில் இருந்தாலும் அந்தப் பெண்பிள்ளைக்கு இனிமேல் போதுமான வளர்ச்சி இருக்காது. உயரம் குறைவு என்று சிகிச்சைக்கு வரும்போது,  மீண்டும் போதுமான உயரம் வளர்வது சாத்தியமாக இருக்காது. ஏனெனில் 12 வயது ஆகும் வரை உயரம் முதலான வளர்ச்சி இருந்து வயதுக்கு வரும் குழந்தைக்கும், 8 வயதில் உயரம் இன்றி பருவம் அடையும் குழந்தைக்கும் உயரம் வித்தியாசம் அதிகமாகவே இருக்கும்.  குறிப்பாக எலும்புகள்’’ என்கிறார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow