தமிழக அரசுப்பள்ளிகளில் அதிரடி சரவெடி.. 3,00,298 மாணவர்கள் சேர்ப்பு.. என்னென்ன சலுகைகள்
தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதத்தில் அரசு பள்ளிகளில் 3,00,298 சேர்க்கப்பட்டுள்ளனர். இது புதிய சாதனையாகும். இந்த கல்வி ஆண்டின் கடைசி வேலை நாளான ஏப்ரல் 30 ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது.
பள்ளிகளில் 2024-25-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த 1ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. வழக்கத்தைவிட ஒரு மாதத்துக்கு முன்பாகவே அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியிருக்கிறது. இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் 4 லட்சத்துக்கு மேல் மாணவர் சேர்க்கை இலக்கை கொண்டு பள்ளிக்கல்வித் துறை தீவிரமாக களம் இறங்கி இருக்கிறது.
வழக்கமாக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த காலங்களில் கல்வி ஆண்டு துவங்கும் ஜூன் மாதத்தில் தொடங்கப்படும் ஆனால் இந்த முறை அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு மார்ச் ஒன்றாம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டது.
சென்னையில் கடந்த மார்ச் ஒன்றாம் தேதி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவங்கி வைத்தார். கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வரும் மாணவர் சேர்க்கையில் இதுவரை மூன்று லட்சத்து 298 மாணவர்கள் அரசு பள்ளிகளில் துவக்க நிலை தொடங்கி சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 21,233 மாணவர்களும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 16 ஆயிரத்து 938 மாணவர்களும் திருவண்ணாமலையில் 12764 மாணவர்களும் என 39 மாவட்டங்களில் 3லட்சத்து 298 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 4 லட்சத்திற்கும் அதிகமாக மாணவர்களை இந்த ஆண்டு சேர்க்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 92.29 சதவீத மாணவர்கள் புதிதாக அரசுப் பள்ளிகளில் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் கல்வியாண்டில் இருந்து தனியார் பள்ளிகளுக்கு நிகராக உயர் தொழில்நுட்ப ஆய்வகம், ஸ்மார்ட் வகுப்பறைகள் என பல்வேறு வசதிகளை அரசு பள்ளிகளில் கொண்டு வர இருக்கிறது. அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு என பல்வேறு சலுகைகள் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
அதுமட்டுமல்லாமல், அரசு பள்ளி மாணவர்களுக்கு என்ன மாதிரியான நலத் திட்டங்கள் கிடைக்கும், அவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த அரசின் திட்டங்கள், அவர்களின் திறனை வளர்க்க உள்ள விஷயங்கள் உள்பட பல்வேறு தகவல்களை விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
What's Your Reaction?