நாங்கள் ஆசாபாசங்களுக்கு இணங்கி தடுமாறக் கூடியவர்கள் அல்ல- தொல்.திருமா பேச்சு!
வரும் ஆகஸ்ட் 17 அன்று, எழுச்சி நாள் விழாவில், மதச்சார்பின்மையைக் கருப்பொருளாகக் கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டம் அரூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் சாக்கன் சர்மா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சிறப்புரையாற்றினார். அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் தி.மு.க. மேற்கு மாவட்டச் செயலாளர் பழனியப்பன் உள்ளிட்டோரும் இதில் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய திருமாவளவன், இக்கூட்டம் கட்சி மாநில அங்கீகாரம் பெற்றதற்காகவும், ஆகஸ்ட் 17 அன்று வரவுள்ள தனது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கும், அண்மையில் திருச்சியில் நடைபெற்ற "மதச்சார்பின்மை காப்போம்" மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்குவதற்கும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
தேர்தல் நிதி அளிப்புக் கூட்டம்:
மேலும், இது தமிழகத்தில் முதன்முறையாக அரூரில் நடத்தப்பட்ட தேர்தல் நிதி அளிப்புக் கூட்டம் என்றும், இதில் ₹27 லட்சம் நிதி திரட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். "அ" என்ற முதல் எழுத்தைக் கொண்ட அரூரில் இருந்து தொடங்கிய இந்த முயற்சி, வரும் தேர்தல்களில் வெற்றிக்கு வழிவகுக்கும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.
மற்ற கட்சிகளை ஒப்பிடுகையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு இந்த ₹27 லட்சம் என்பது ஒரு பெரிய தொகை என்றும், தி.மு.க. போன்ற பெரிய கட்சிகளுக்கு இது ஒரு மணி நேரச் செலவு என்றும் குறிப்பிட்டார்.
தமிழக அரசியலில் கால் நூற்றாண்டு காலமாகப் பல்வேறு நெருக்கடிகள், அவதூறுகள், அவமானங்களைத் தாண்டி தாக்குப்பிடித்து வருவதாகவும், தற்போது 4 சட்டமன்ற உறுப்பினர்களையும், இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கொண்டுள்ளதாகவும், இது தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனை என்றும் திருமாவளவன் பெருமிதம் தெரிவித்தார். மேலும், உத்திரப் பிரதேசம், தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் கட்சியின் கொடி பறப்பதாகக் கூறினார்.
திருச்சியில் நடைபெற்ற "மதச்சார்பின்மை காப்போம்" மாநாட்டைத் தொடர்ந்து, வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி எனது பிறந்தநாள் 'எழுச்சி நாள்' விழாவிலும் அதே கருப்பொருளை மையமாக வைத்துப் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றார். "எங்கு பார்த்தாலும் மதச்சார்பின்மை காப்போம் என்ற முழக்கமே ஒலிக்க வேண்டும்" எனத் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
மதச்சார்பின்மைக்கு எதிரான கூட்டம்:
"மதச்சார்பின்மை என்பது இந்தியா முழுவதும் விவாதிக்கப்படும் ஒரு முக்கியப் பொருள். பாரதிய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ ஹிந்து பரிஷத், இந்து முன்னணி போன்ற சங்பரிவார் அமைப்புகளும், அ.தி.மு.க. போன்ற அவர்களுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகளும் அம்பேத்கர் எழுதிய அரசியல் அமைப்புச் சட்டத்தின் மதச்சார்பின்மைக்கு எதிரானவர்கள்," என்று அவர் குற்றம் சாட்டினார்.
மறைந்த கலைஞர் கருணாநிதி பார்ப்பனியத்தை எதிர்ப்பதிலும், பெரியாரின் கொள்கைகளை பேசுவதிலும் உறுதியாக இருந்தார். இந்தியாவிலேயே சமத்துவபுரம் என்ற நுட்பமான சிந்தனையை உருவாக்கியவர் கலைஞர் மட்டும்தான் என்று குறிப்பிடுவதற்காக நான் பேசிய விஷயத்தை, எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவை விமர்சிப்பதாக அ.தி.மு.க.வினர் சித்தரிக்கின்றனர். இன்றைக்குத் தனிக் கட்சி தொடங்கியுள்ள விஜய், தி.மு.க.வையும் கருணாநிதியையும் எதிர்த்தார், விடுதலைச் சிறுத்தைகளும் ஆரம்ப காலத்தில் விமர்சித்திருக்கிறோம் என்பதைத்தான் நான் ஒப்பீடு செய்தேன்," என விளக்கமளித்தார்.
"நாங்கள் ஆசாபாசங்களுக்கு இணங்கி தடுமாறக் கூடியவர்கள் அல்ல. விடுதலைச் சிறுத்தைகளை முழுமையாகப் புரிந்துகொள்ள இன்னும் பல ஆண்டுகள் ஆகும். நாங்கள் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பாசறையில் புடம் போட்டு வளர்க்கப்பட்டவர்கள்," என்று திருமாவளவன் குறிப்பிட்டார். இந்த பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்களும், தி.மு.க., கம்யூனிஸ்ட், ம.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






