நான் ஓடி ஒளிபவன் அல்ல... துயரம் மிகுந்த சமயத்தில் அரசியல் ஆதாயம் தேடவேண்டாம்.. முதல்வர் ஸ்டாலின்
சென்னை: கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.துயரம் மிகுந்த இந்த சமயத்தில் அரசியல் ஆதாயம் தேடவேண்டாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விஷச் சாராய விவகாரம் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானங்கள் மீதான விவாதத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.
தமிழ்நாடு சட்டசபை இன்று 2வது நாளாக நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று சபாநாயகர் அப்பாவுவிடம் அதிமுக, பாமக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு சபாநாயகர் அப்பாவு, ''கேள்வி நேரம் முடிந்தவுடன் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதிக்க அனுமதி வழங்கப்படும்' என்று கூறினார். ஆனால் இதை ஏற்க மறுத்த அதிமுக, பாஜக, பாமக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அரசை கண்டிக்கும் பதாகையை கையில் ஏந்தி தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால். சபாநாயகர் உத்தரவின்பேரில் அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அதிலும் அதிமுக உறுப்பினர் ஆர்.பி.உதயகுமாரை அவைக்காவலர்கள் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று அவையில் இருந்து வெளியேற்றினார்கள்.
சட்டப்பேரவையின் மாண்பை அதிமுகவினர் மீறி விட்டனர் என்று அதிமுகவினர் வெளியேற்றப்பட்டது குறித்து சபாநாயகர் அப்பாவுவும், அமைச்சர் துரைமுருகனும் விளக்கம் அளித்தனர்.
தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் இன்று ஒருநாள் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்க சபாநாயகர் அப்பாவு தடை விதித்தார். பின்பு முதல்வர் ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று அப்பாவு அந்த தடையை நீக்கினார்.
இதன்பிறகு கள்ளக்குறிச்சி உயிரிழப்பு விவகாரம் மீதான விவாதம் நடந்தது. திமுக கூட்டணி கட்சிகளின் உறுப்பினர்கள் செல்வபெருந்தகை உள்ளிட்ட பல்வேறு உறுப்பினர்கள் இந்த விவாதம் மீது பேசினார். கடைசியில் கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர்,கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்பு விவரிக்க முடியாத வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கருத்துகளை தெரிவித்த உறுப்பினர்களுக்கு நன்றி. எதிர்க்கட்சித் தலைவரும் அவைக்குள் இருந்து தனது கருத்துகளை தெரிவித்திருக்கலாம். அரசியல் காரணங்களுக்காக எடப்பாடி பழனிசாமி வெளிநடப்பு செய்துவிட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் இந்த பிரச்சனையில் இருந்து நான் ஓடி ஒளிபவன் அல்ல. பொறுப்பை உணர்ந்த காரணத்தினால்தான் பொறுப்போடு பதிலளிக்கிறேன். எடுத்த நடவடிக்கைகளையும் பட்டியலிட்டுள்ளேன்.
குற்றவாளிகளை கைது செய்துவிட்டுதான் உங்களுக்கு பதிலளிக்கிறேன். அ.தி.மு.க ஆட்சியில் ஏற்பட்ட கள்ளச்சாராயம் தொடர்பான பட்டியல் என் கையில் இருக்கிறது. அதையெல்லாம் வைத்து அரசியல் பேச நான் விரும்பவில்லை. இதை அரசியலாக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
சமூக விரோத சக்திகளிடம் இருந்து மக்களை காக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது விழுப்புரம், சேலம், திருச்சி, செங்கல்பட்டில் இருந்து 57 மருத்துவர்கள் கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்
மருந்துகள் தேவைப்பட்டால் வெளிச்சந்தையில் வாங்கி, பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கள்ளக்குறிச்சி விஷச்சாராயத்துக்கு பயன்படுத்தப்பட்ட மெத்தனால் புதுச்சேரியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. சாராயத்தை விற்றவர்களிடம் இருந்து 200 லிட்டர் மெத்தனால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஏற்கெனெவே ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் நடந்த விஷச் சாராய மரணம் தொடர்பாக 21 பேர் கைதுசெய்யப்பட்டனர், அதில் 8 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் கள்ளச்சாராயம் தொடர்பாக 4.63 லட்சம் வழக்குகள் பதிவாகியுள்ளது. கள்ளச்சாராயம் விற்றதாக 4,61,084 பேர் கைது செய்யப்பட்டனர்; அவர்களில் 565 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோர் ஆய்வுசெய்து ஓரிரு நாளில் அறிக்கை தர உத்தரவிட்டுள்ளேன். அறிக்கை கிடைத்தவுடன் அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். விஷச் சாராய மரணம் தொடர்பாக விசாரிக்க சிபிசிஐடிக்கு உத்தரவிட்டேன், அதன் அடிப்படையில் விசாரணை தொடங்கியுள்ளது.
கள்ளக்குறிச்சிக்கு அமைச்சர்கள் எ.வ.வேலு, உதயநிதி, மா.சுப்பிரமணியன் ஆகியோர் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டனர். கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு அறிவித்த ரூ.10 லட்சம் உடனடியாக வழங்கப்பட்டுள்ளது. விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களுடைய குழந்தைகளின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும். பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடையும் வரை பராமரிப்பு செலவுக்காக மாதம் ரூ.5,000 வழங்கப்படும். பெற்றோரை இழந்த குழந்தைகளின் உயர்கல்வி வரை அவர்களது கல்விச் செலவை அரசே ஏற்றுக் கொள்ளும்.
பெற்றோர் இருவரையோ அல்லது ஒருவரையோ இழந்து வாடும் குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு முடியும் வரை கல்வி கட்டணம், விடுதி கட்டணத்தை அரசே ஏற்கும். பெற்றோரை இழந்த குழந்தைகள், அவர்களின் விருப்பத்தின்பேரில் அரசு விடுதிகளில் சேர்க்கப்படுவார்கள். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்க கூடுதல் நிதி அளிக்கப்படும். பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் வங்கியில் டெபாசிட் செய்யப்படும். குழந்தைகள் 18 வயது நிறைவடைந்தவுடன் வட்டியுடன் ரூ.5 லட்சம் வழங்கப்படும். பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் வைப்பு நிதி வழங்கப்படும்.
பெற்றோரில் ஒருவரையோ இருவரையோ இழந்து வாடும் குழந்தைகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளிலும் முன்னுரிமை வழங்கப்படும். நான் ஓடி ஒளிபவன் அல்ல; எதையும் எதிர்கொள்பவன். பொறுப்பை உணர்ந்த காரணத்தினால் தான் குற்றவாளிகளை கைது செய்து விட்டு பொறுப்போடு பதில் அளிக்கிறேன். துயரம் மிகுந்த இந்த சமயத்தில் அரசியல் ஆதாயம் தேடவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.
What's Your Reaction?