”அதிரடி சிக்ஸர்கள்” - ஜெய்ஸ்வால் அபார சாதனை!
இங்கிலாந்து எதிரான போட்டியில் இந்திய வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் விளாசி சாதனைப் படைத்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் குவித்தது. அதிகப்பட்சமாக ரோஹித் சர்மா 131 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 112 ரன்களும் எடுத்தனர்.
தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 319 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பென் டக்கெட் மட்டும் 139 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் யாரும் அரைச்சதத்தை கூட எட்டவில்லை. இதனையடுத்து 126 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது இரண்டாவது இரட்டைச் சதத்தைப் பதிவு செய்தார். இதனால் இந்திய அணி 2ஆவது இன்னிங்ஸில் 430 ரன்கள் எடுத்தது. அவர் 214 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்வதாக இந்திய அணி அறிவித்தது. இதனால், இங்கிலாந்து அணிக்கு 556 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்த போட்டியில் இரட்டைச் சதம் விளாசிய இந்திய வீரர் ஜெய்ஸ்வால், ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் விளாசிய இந்திய வீரர் சாதனைப் படைத்துள்ளார். ஜெய்ஸ்வால் தனது இரண்டாவது இன்னிங்ஸில் 12 சிக்ஸர்கள் விளாசி இருந்தார். இதற்கு முன்னதாக நவ்ஜோத் சிங் சித்து, மயங்க் அகர்வால் இருவரும் 8 சிக்ஸர்கள் அடித்ததே இந்திய வீரர்களின் அதிகப்பட்சமாக இருந்தது.
அதே சமயம் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம் 1996ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் 12 சிக்ஸர்கள் அடித்திருந்தார். அந்த சாதனையை ஜெய்ஸ்வால் சமன் செய்துள்ளார். மேலும், இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், விராட் கோலிக்குப் பிறகு 400 ரன்களை கடந்த இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் விராட் கோலி 593 ரன்கள் குவித்துள்ளார்.
ரோஹித் சர்மா சாதனை முறியடிப்பு:
ஒரு டெஸ்ட் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஜெய்ஸ்வால் [22] முதலிடம் பிடித்துள்ளார். இதன் மூலம் 2019ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 19 சிக்சர்களை விளாசிய ரோகித் சர்மாவின் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?