மேட்ச் முடிஞ்ச கையோட ஸ்டேடியத்த காலி பண்ணிடலாம் : இந்தியா-பாக். போட்டி நடக்கும் நியூயார்க் மைதானம் குறித்த சுவாரஸ்ய தகவல்.. !
2024 டி 20 உலகக் கோப்பை போட்டிக்கு தயாராகும் மைதானம்
2024 டி 20 உலகக் கோப்பை போட்டி அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் நாடுகளில் நடக்கவுள்ள நிலையில், பிரத்யேகமாக தயாராகி வரும் நியூயார்க் மைதானம் குறித்த தகவல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
வரலாற்றில் முதல்முறையாக கிரிக்கெட் உலகக்கோப்பையை அமெரிக்கா, மேற்கு இந்திய தீவுகள் நாட்டுடன் இணைந்து நடத்துகிறது. டென்னிஸ், பேட்மிண்டன் பல்வேறு உலகக்கோப்பைகளை நடத்தியுள்ள அமெரிக்க இதன்மூலம் கிரிக்கெட் உலகக்கோப்பையையும் நடத்திய பெருமையை பெறவுள்ளது. இதனால் அதற்கான பணிகள் முழுவீச்சிலும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நியூயார்க் நகரின் நாஸ்ஸவ் கவுன்டி மைதான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் தேதியே துவங்கிய பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. Modular stadium செட்-அப்பில் உருவாகி வரும் இந்த மைதானத்தை போட்டிகள் நிறைவடைந்ததும் எளிதாக அகற்றிவிடலாம். இதுபோன்ற மைதானங்கள் ஒலிம்பிக் விளையாட்டுகள் மற்றும் F1 கார் பந்தய போட்டிகளுக்கு அமைக்கப்படுவது வழக்கமாகும்.
ஜூன் 2 ஆம் தேதி துவங்கும் உலக கோப்பை தொடரில், 3 ஆம் தேதி இலங்கை - தென்னாப்பிரிக்க அணிகள் முதன்முறையாக இந்த மைதானத்தில் விளையாடவுள்ளன. அதைத் தொடர்ந்து ஜூன் 9 ஆம் தேதி ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி இங்குதான் நடக்கவுள்ளது. மொத்தம் 8 போட்டிகள் இந்த மைதானத்தில் நடக்கவுள்ள நிலையில், அதில் 3 போட்டிகள் இந்தியா விளையாடுகிறது.
ஜூன் 5 : இந்தியா - அயர்லாந்து
ஜூன் 9 : இந்தியா - பாகிஸ்தான்
ஜூன் 12 : இந்தியா - அமெரிக்கா
இந்த மைதானத்தின் பணிகள் மற்றும் சோதனைகள் மே மாதம் முடியும் என ஐசிசி தெரிவித்திருக்கிறது. மைதானம் கட்டுமான பணிகள் வேகமாக அமைக்கப்படுவதால் எளிதில் சேதமடையும் என நினைக்க வேண்டாம் என்றும், உலகின் பல பெரிய மைதானங்களை கட்டிய நிறுவனம்தான், இந்த மைதானத்தை உருவாக்கி வருவதாகவும் ஐசிசி தெரிவித்துள்ளது. இதில் 34,000 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து போட்டியை காணும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
What's Your Reaction?