பாரா ஒலிம்பிக்கில் வென்றவர்களுக்கு 5 கோடி ஊக்கத்தொகை - தமிழக அரசு

பாரா ஒலிம்பிக்கில் பல்வேறு பிரிவுகளில் பதக்கம் வென்ற வீரர் மற்றும் வீராங்கனைகளும் மொத்தம் 5 கோடி ரூபாய் ஊக்கத் தொகையினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Sep 25, 2024 - 15:16
பாரா ஒலிம்பிக்கில் வென்றவர்களுக்கு 5 கோடி ஊக்கத்தொகை - தமிழக அரசு
para olympic winners

மாற்றுத் திறனாளிகளுக்காக நடத்தப்படும் மிகப்பெரிய விளையாட்டுப் போட்டிதான் பாரா ஒலிம்பிக். இந்த 2024ம் ஆண்டில் ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தப் போட்டிகளில் பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற துளசிமதி என்கிற வீராங்கனைக்கு 2 கோடி ரூபாய், பேட்மிண்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனைகள் நித்ய ஸ்ரீ மற்றும் மனிஷா ஆகியோருக்கு தலா 1 கோடி ரூபாய், ஆண்கள் உயரம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்ற தடகள வீரர் மாரியப்பனுக்கு 1 கோடி ரூபாய் என 5 கோடி ரூபாயை வீரர்களுக்கு ஊக்கத் தொகையாக வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தலைமைச் செயலகத்தில் பாரா ஒலிம்பி வீரர்களைச் சந்தித்த  முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை வாழ்த்து காசோலைகளை வழங்கினார். 

தடகல வீரர் மாரியப்பன் ஏற்கனவே 2016ம் ஆண்டு பிரேசில் நாட்டின் ரியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கமும், 2020ம் ஆண்டு ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார் என்பது குறிப்பிட வேண்டியது. 

காசோலை வழங்கிய இந்நிகழ்வில் பேசிய முதல்வர் ஸ்டாலின் “விளையாட்டுத் துறையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடவும், இந்திய அளவிலும், உலக அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், உயரிய ஊக்கத்தொகை வழங்குதல், விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் என பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. மேலும், மாநிலத்தில் அதிநவீன விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை பெருநிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நன்கொடையாளர்களிடமிருந்து நன்கொடை பெற்று “தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை”யை உருவாக்கியது, சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்திடத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது போன்ற பல்வேறு திட்டங்களையும் தமிழ்நாடு அரசு முழு மூச்சோடு செயல்படுத்தி வருகிறது.” என்று கூறினார். 

பதக்கம் வென்ற வீரர்களுக்கு மட்டுமின்றி பாரீஸில் நடைபெற்ற ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக தலா 7 லட்சம் ரூபாய் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow