”என் ரசிகர்கள் இதுக்காக வருத்தப்பட்டாங்க” பிரஸ்மீட்டில் ஜெயம் ரவி Open Talk
’பிரதர்’ படத்திற்கான செய்தியாளர் சந்திப்பில் ஒரு விஷயத்தை தான் செய்யாததால் தன்னுடைய ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர் என பேசியுள்ளார் நடிகர் ஜெயம் ரவி.
 
                                இயக்குநர் எம். ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'பிரதர்' திரைப்படத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா அருள் மோகன், பூமிகா சாவ்லா, விடிவி கணேஷ், நட்டி என்கிற நட்ராஜ் சுப்பிரமணியன், ராவ் ரமேஷ், அச்யுத் குமார் , சரண்யா பொன்வண்ணன், சீதா, சதீஷ் கிருஷ்ணன், எம்.எஸ்.பாஸ்கர், சுரேஷ் சக்கரவர்த்தி, விருத்தி விஷால், மாஸ்டர் அஸ்வின் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விவேகானந்த் சந்தோஷம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படக்குழுவின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த சந்திப்பில் இயக்குநர் எம். ராஜேஷ், நடிகர்கள் ஜெயம் ரவி, நட்டி என்கிற நட்ராஜ், விடிவி கணேஷ், நடிகை பூமிகா சாவ்லா, ஒளிப்பதிவாளர் விவேகானந்த் சந்தோஷம், படத்தொகுப்பாளர் ஆசிஷ் ஜோசப், கலை இயக்குநர் ஆர் .கிஷோர், சண்டை பயிற்சி இயக்குநர் ஸ்டன்னர் சாம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் நடிகர் நட்டி என்கிற நட்ராஜ் சுப்பிரமணியன் பேசுகையில், ''இந்தப் படத்தின் கதையை இயக்குநர் சொல்லும் போதே எனக்கு பிடித்திருந்தது. இன்றைய சூழலில் அரசியல் படங்கள், நகைச்சுவை படங்கள் என பல படங்கள் வந்திருக்கிறது. ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில் ஃபேமிலியை பற்றி பேசும் படங்கள் மிக குறைவாகத்தான் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் அந்தக் குறையை தீர்க்கும் வகையில் இந்த திரைப்படம் இருக்கும் என உறுதியாக நம்புகிறேன்.
நடிகர் ஜெயம் ரவி பட்டாசை போல் வெடித்திருக்கிறார். சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தின் கதாபாத்திரத்திற்கும், இந்தப் படத்தில் அவர் ஏற்றிருக்கும் கார்த்திக் எனும் கதாபாத்திரத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. அதனால் இந்த தீபாவளிக்கு சரவெடியாக ஜெயம் ரவியின் நடிப்பு இருக்கும்.
இந்தப் படத்திற்கு அதிகம் உழைத்திருப்பவர் ஹாரிஸ் ஜெயராஜ். இசைஞானி இளையராஜாவின் பாடல்களுக்கு பிறகு இவரின் இசையில் வெளியான பாடல்களை தான் அதிகம் ரசித்திருக்கிறேன். அதே அளவிற்கு இந்த படத்தின் பின்னணி இசையும் இருக்கும் என்று நம்புகிறேன். எனக்கு இந்த படத்தில் நல்ல கதாபாத்திரத்தை வழங்கியதற்காக இயக்குநர் ராஜேஷிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட நாள் கழித்து திரையரங்குகளில் ஒரு படத்தை பார்த்துவிட்டு ஃபீல் குட் உணர்வுடன் வீடு திரும்பும் ஒரு படமாக இந்த பிரதர் படம் இருக்கும்,'' என்றார்.
நடிகர் விடிவி கணேஷ் பேசுகையில், ''இயக்குநர் ராஜேஷ் காமெடி படங்களை இயக்குவதில் வல்லவர். அவர் எப்படி இது போன்ற ஃபேமிலி படத்தை இயக்க உள்ளார் என எதிர்பார்த்தேன். என்னை சந்தித்து பேசும்போது என் கதாபாத்திரத்திற்கான விஷயங்களைப் பற்றி மட்டும் சொன்னார். அவர் ஏற்கனவே நல்ல படங்களை இயக்கிய இயக்குநர் என்பதால் அவர் மீது நம்பிக்கை வைத்து நடிப்பதற்கு ஒப்புக்கொண்டேன். அதே தருணத்தில் படத்தின் தயாரிப்பாளர் கதை கேட்டு தான் படத்தை தயாரிக்க ஒப்புக் கொள்வார் என எனக்கு ஏற்கனவே தெரியும். அதனால் அவர் மீதும் நம்பிக்கை வைத்தேன். இவர்களையெல்லாம் கடந்து எனக்கு மிகவும் பிடித்த ஹீரோ ஜெயம் ரவியின் படம் இது. நல்ல ஹைட் .நல்ல கலர். திறமையான நடிகர். அவருக்கு நடிப்பை விட டைரக்ஷன் நாலெட்ஜ் அதிகம். எனக்குத் தெரிந்து சிம்புவிற்கு அடுத்து இது போன்ற நாலெட்ஜ் உள்ளவர் ஜெயம் ரவி மட்டும்தான்." என்றார்.
 
நடிகை பூமிகா சாவ்லா பேசுகையில், ''இந்தப் படம் எனக்கு ஸ்பெஷலானது. இந்த படத்தில் பணியாற்றியது மறக்க இயலாத அனுபவமாக இருந்தது. நடிகர் ரவி அற்புதமான மனிதர், திறமையான நடிகர். பிரியங்கா அருள் மோகன் க்யூட்டான பொண்ணு. இந்த திரைப்படம் அக்காவிற்கும் தம்பிக்கும் இடையேயான உறவை பேசுகிறது. இந்த படத்தை திருவிழா நாளில் திரையரங்கத்திற்கு சென்று ரசித்து கொண்டாடுங்கள்,'' என்றார்.
இயக்குநர் எம். ராஜேஷ் பேசுகையில், ''மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. தீபாவளி திருநாளில் என்னுடைய திரைப்படம் வெளியாகிறது. என்னுடைய இயக்கத்தில் உருவான படம் திரையரங்கத்தில் வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆகிறது. ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு என்னுடைய படம் திரையரங்கில் வெளியாகிறது. கொண்டாட்டத்திற்குரிய திரைப்படம் திருவிழா நாளில் வெளியாகிறது. இது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. இதற்காக ஜெயம் ரவிக்கு நன்றி சொல்கிறேன்.
இதற்கு முன் நாங்கள் இணைந்து பணியாற்ற வேண்டும் என பேசினோம். ஆனால் எதுவும் சாத்தியமாகவில்லை. இந்தப் படத்தின் திரைக்கதையை நான் அவரிடம் சொன்னபோது அவர் முழுவதும் கேட்டுவிட்டு ஓகே சொன்னார். அப்போதிலிருந்து இப்போது வரை நடிகர் என்பதை கடந்து உதவி செய்வதுடன் முழுமையான ஒத்துழைப்பையும் அளித்து வருகிறார். இந்தப் படத்திற்காக நடிகராக மட்டுமில்லாமல் அவருக்குத் தோன்றும் எண்ணங்களையும் என்னுடன் பகிர்ந்து கொண்டார். படத்தை விளம்பரப்படுத்துவதற்கும் நிறைய ஆலோசனைகளை வழங்கினார். அவர் இல்லாமல் இந்த திரைப்படம் இல்லை. இதற்காக அவருக்கு மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுந்தர் டைனமிக்கான தயாரிப்பாளர் . அவர் ஒரு விஷயத்தை நம்பி விட்டால் அதற்காக கடுமையாக உழைப்பவர். இவரைப் போன்ற அர்ப்பணிப்புடன் கூடிய தயாரிப்பாளர் திரையுலகத்திற்கு தேவை. இந்த நிறுவனம் தொடர்ந்து திரைப்படங்களை தயாரிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. தமிழ் சினிமாவிற்கு கிடைத்த சிறந்த தயாரிப்பாளர் இவர்.
இப்படத்தின் நாயகி பிரியங்கா மிகவும் க்யூட். படப்பிடிப்பு தளத்தில் காட்சிகளை படமாக்கும் போது நான் கட் சொன்ன பிறகும் அவரின் சின்ன சின்ன ரியாக்ஷன்களை வைத்து படமாக்கி அதனை படம் வெளியான பிறகு இணையத்தில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறேன். அது மிகவும் சுவாரசியமானதாக இருக்கும். படப்பிடிப்பு தளத்தில் ஜாலியாகவும் உற்சாகமாகவும் உலா வருவார்.
அடுத்து பூமிகா சாவ்லா, அவரை மும்பையில் சந்தித்து இப்படத்தின் கதையை சொன்னேன். உடனே நடிக்க ஒப்புக்கொண்டார். தற்போது வரை படத்தின் ப்ரோமோஷனுக்காக மும்பையில் இருந்து வருகை தந்து ஒத்துழைப்பு வழங்கி வருகிறார். அவரும் இந்த படத்தை பெரிதாக நம்புகிறார். அவருக்கு படத்தில் நடித்த கேரக்டர் மிகவும் பிடித்திருந்தது என சொன்னார். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு அவர் மீண்டும் தமிழில் நடிக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் அவருக்கு மொழி விஷயத்தில் தடை இருந்தது. இருந்தாலும் காட்சியை விளக்கிய பிறகு நடித்துக் கொடுத்தார். படத்தில் ஒரு அக்கா எப்படி இருப்பார் என்பதற்கு முன்னூதாரணமாக அவரது கதாபாத்திரம் இருக்கும். படத்தைப் பார்த்த பிறகு அக்கா இல்லாதவர்களுக்கு இது போன்றதொரு அக்கா இருக்கக் கூடாதா என்ற எண்ணம் ஏற்படும்.
படத்தில் வி டி வி கணேஷ் என்டர்டெய்ன்மென்ட்டான கேரக்டரில் நடித்திருக்கிறார். அவர் நகைச்சுவையாக நடிப்பார். அவருடைய வசன உச்சரிப்பு வித்தியாசமானதாக இருக்கும். அவர் பேசும் வார்த்தைகள் புதிதாக இருக்கும். இந்த படத்தில் அவர் ஒரு காட்சியில் உணர்வுப்பூர்வமாகவும் நடித்திருக்கிறார். அது எனக்கு சந்தோஷமான விசயம். இந்தக் காட்சியை படமாக்கும் போது அவரது நடிப்பை பார்த்து படபிடிப்பு தளத்தில் நாங்கள் அனைவரும் கைத்தட்டி மகிழ்ச்சியை தெரிவித்தோம்.
நட்டி என்னுடைய நீண்ட நாள் நண்பர். அவரை தொடர்பு கொண்ட உடன் நடிக்கிறேன் என்று ஒப்புக் கொண்டார். இந்த கேரக்டரை எழுதியவுடன் என்னுடைய முதல் தேர்வு அவராகத்தான் இருந்தது. அவரும் இந்த படத்தில் நன்றாக நடித்திருக்கிறார்.
என்னுடைய படத்தில் பைட் சீன்ஸ் இருக்கும். ஆனால் எடிட்டிங்கில் சென்றுவிடும். ஆனால் இந்த படத்தில் பைட் இருக்கிறது. பைட் மாஸ்டரும் ஜெயம் ரவியும் நெருங்கிய நண்பர்கள். அதனால் இந்த படத்தில் சண்டை காட்சிகள் கூடுதலாகவே இருக்கிறது. சண்டைக் காட்சிகள் அனைத்தும் விரைவாகவும், நேர்த்தியாகவும் நிறைவடைந்தது.
இந்த படத்தின் எடிட்டர் ஆஷிஷ். இந்தப் படம் மொத்தம் மூணு மணி நேரம் 40 நிமிஷம். ஆஷிஷ் வேகமாக எடிட் செய்வார். படப்பிடிப்பு தளத்திலேயே அன்றைய காட்சிகளை எடிட் செய்து காண்பிப்பார். அதிலேயே அவருடைய கிரியேட்டிவ் தெரியும். பெர்ஃபெக்ஷன் ஆகவும் இருக்கும். இந்தப் படத்தை அனைவரும் ரசிக்கும் படி தொகுத்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் விவேக் பணியாற்றிய படங்கள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும். இதற்கு முன் சில படங்களில் இணைந்து பணியாற்ற நினைத்திருந்தோம். ஆனால் இந்த படத்தில் தான் அது சாத்தியமானது. அவருடன் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
ஊட்டியை திரில்லர் திரைப்படங்களில் பார்த்திருப்போம். ஹாரர் திரைப்படங்களின் பார்த்திருப்போம். ஆனால் ஊட்டியை வண்ணமயமாக பார்க்க வேண்டும் என விரும்பினோம். இந்தப் படத்தில் ஊட்டியை அவர் அழகாகவும், வண்ணமயமாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் ராவ் ரமேஷ் நடித்திருக்கிறார். நான் எழுதிய அந்த கதாபாத்திரத்திற்கு புதிதாக ஒரு நடிகர் வேண்டும். அந்த கதாபாத்திரம் அற்புதமானது. ஜெயம் ரவி தான் ராவ் ரமேஷை பரிந்துரை செய்தார். அவரை சென்று பார்த்தவுடன் தமிழ் நன்றாக பேசுகிறார். தமிழ் படங்களில் நடிக்கவும் ஆர்வம் காட்டினார். இந்தப் படத்தில் அவர் நடித்த கதாபாத்திரத்திற்கு அவரே டப்பிங்கும் பேசியிருக்கிறார்.
என்னுடைய எல்லா படத்திலும் சீரியஸான அப்பாவியான அம்மா கதாபாத்திரத்தில் சரண்யா மேடம் நடித்திருப்பார்கள். இந்தப் படத்தில் சரண்யா இங்கிலீஷில் பேசுவது போல் நடித்திருக்கிறார்கள். இது ஒரு கிளீன் ஃபேமிலி எண்டர்டெய்னர். இந்த படத்தை சென்சார் குழுவினர் பார்த்தபோது ஒரு கட் கூட கொடுக்காமல் கிளீன் யூ சர்டிபிகேட்டை கொடுத்தார்கள். இதுவே எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.
பாஸ் என்கிற பாஸ்கரன் - சந்தோஷ் சுப்பிரமணியம் இந்த இரண்டு திரைப்படத்தையும் இன்றைய டிரெண்டிற்கு ஏற்ற அளவில் அப்டேட் செய்தால் எப்படி இருக்கும் என்பதை நினைத்து தான் இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம். இதனை ரசிகர்களாகிய நீங்கள் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்துவிட்டு சொல்லுங்கள். குடும்பத்துடன் பார்க்க வேண்டிய ஜாலியான படமாக இது இருக்கும். இந்தப் படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களுக்கும் நான் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறேன்.
இந்தப் படத்தில் மிகப் பெரிய பலம் ஹாரிஸ் ஜெயராஜ் படத்திற்கான பின்னணி இசைக்கு நிறைய நேரம் எடுத்துக்கொண்டு நேர்த்தியாக உருவாக்கி இருக்கிறார். பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இந்தப் படம் வெளியான பிறகு இன்னும் இரண்டு பாடல்கள் வெற்றி பெறும். அவருக்கு நான் ரசிகன். அவருடன் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது”, என்றார்.
நடிகர் ஜெயம் ரவி பேசுகையில், ''பிரதர் திரைப்படம் நல்லதொரு டீசன்டான மூவி. லீனியர் நரேஷனில் அழகான படமாகவும் குடும்பம் முழுவதும் மகிழ்ச்சி அடையும் வகையிலும் பிரதர் உருவாகி இருக்கிறது. ஒரு தீபாவளி படத்திற்கு என்னென்ன டிக் மார்க் வேண்டுமோ, அவை எல்லாம் ஒன்றாக சேர்ந்திருக்கும் படம் தான் பிரதர். இந்தப் படத்தை உருவாக்கும் போதும் நாங்கள் அனைவரும் சந்தோஷமாகவே பணியாற்றினோம்.
இந்தப் படத்தில் படப்பிடிப்பு நடைபெறும் தருணங்களில் நாங்கள் அனைவரும் ஒரு குடும்பமாகத்தான் இருந்தோம். தயாரிப்பாளர் சுந்தர் எங்கள் அனைவருக்கும் அனைத்து வசதிகளையும் அளித்தார். படப்பிடிப்பு நடைபெற்ற தருணத்தில் பூமிகாவின் பிறந்தநாள் வந்தது, அதற்காக படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடினோம். படப்பிடிப்பு நடைபெற்ற நாட்கள் முழுவதும் அனைவரிடமும் அன்பும், அக்கறையும் இருந்தது. இந்தப் படத்தை நடித்த நடிகர்களையும் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களையும் மறக்க முடியாது. கடுமையாக உழைப்பில் உருவான திரைப்படம் இது.
நட்டி சார் ஒரு யூனிக்கான ஆக்டர். இவரை புரிந்து கொள்ளவே முடியாது ஹீரோவா..? வில்லனா ..? கேரக்டர் ஆர்டிஸ்டா..? இல்ல காமெடி பண்ண போறாரா..? என புரிந்து கொள்ள முடியாது . ஆனால் எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் அதில் ஒரு அவருடைய தனித்துவமான நடிப்பு திறமை இருக்கும். அவருடைய ஒளிப்பதிவுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். அவர் ஒரு சிறந்த நடிகர் என்பது அவருடன் இணைந்து பணியாற்றும் போது தான் தெரிய வருகிறது.
மேலும், பூமிகா நிறைய படங்களில் நடித்திருக்கிறார் . அவரை திரையில் எப்போது பார்த்தாலும் சலிப்பே வராத ஒரு முகம். என்னுடைய குடும்பத்தினருக்கு அவரை மிகவும் பிடிக்கும். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அவருடைய ரசிகர்கள். இந்தப் படத்தில் பூமிகாவிற்கு தம்பியாக நடிக்கிறேன் என்று சொன்னவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்தப் படத்தில் அவர் நடிக்க ஒப்புக் கொண்டது இந்தப் படத்திற்கு கூடுதல் பலம். அது படம் வெளியான பிறகு அனைவருக்கும் தெரியும். அவருடைய நடிப்பு திறமை இப்படம் வெளியான பிறகு பேசப்படும்.
படப்பிடிப்பு தளத்தில் நடிகர் வி டி வி கணேஷ் எப்போதும் ஜாலியாக இருப்பார். சில நேரத்தில்.. என்னிடத்தில் சில கோணங்களை சுட்டிக்காட்டி இதில் இப்படி நடித்துப் பார் என ஆலோசனை வழங்குவார். அது ஒரு புது விஷயமாக இருக்கும். அதனால் இந்த படத்தில் சில புதிய விஷயங்களை முயற்சி செய்து இருக்கிறேன்.. இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஹாரிஸ் ஜெயராஜ் என்னுடைய படங்களுக்கு ஹிட் கொடுக்கும் இசையமைப்பாளர். 'எங்கேயும் காதல் ' 'தாம் தூம்' ஆகிய படங்களில் எல்லா பாடல்களையும் ஆல்பமாக ஹிட் கொடுத்தவர். அதேபோல் இந்தப் படத்தையும் ஹிட்டாக்கிருக்கிறார்.
என்னுடைய ரசிகர்கள் நான் நடனம் ஆட வில்லை என வருத்தப்பட்டார்கள். எதிர்காலத்தில் டான்ஸ் இருக்கிற படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். இந்தப் படத்தில் இடம்பெற்ற 'மக்கா மிஷி' பாடல் ஹிட் ஆகியிருக்கிறது. ஆனால் இந்த படத்தில் அக்காவுக்கும் தம்பிக்கும் இடையே ஒரு எமோஷனலான பாட்டு இருக்கிறது. இந்தப் பாட்டு .. படம் வெளியான பிறகு ஹிட் ஆகும்.
இயக்குநர் ராஜேஷ் அவர்களுடைய திறமைக்கு அவர் இன்னும் கூடுதல் உயரத்தை அடைய வேண்டும். அவர் எமோஷனை அழகாக சொல்வார். அவர் எஸ் எம் எஸ் படத்தில் சொன்ன விஷயங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவருடைய திரைக்கதையில் இடம்பெறும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் ஒரு தனித்துவம் இருக்கும். இரண்டொரு காட்சிகள் நடிக்கும் நடிகர்களுக்கு கூட நல்லதொரு வாய்ப்பை வழங்கி இருப்பார். இந்தப் படம் அனைவரும் குடும்பத்துடன் திரையரங்கத்திற்கு சென்று ஜாலியாக ரசிக்கக் கூடிய படம். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்," என்றார்.
What's Your Reaction?
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 
                                                                                                                                             
                                                                                                                                             
                                                                                                                                            
 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            