குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டம் இயற்றப்படும் - ராகுல்காந்தி

Feb 13, 2024 - 17:29
குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டம் இயற்றப்படும் - ராகுல்காந்தி

மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது வழங்கி கெளரவித்த மத்திய அரசு,  அவரது பரிந்துரைகளை செயல்படுத்த தயங்குவது ஏன்? என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்து சட்டம் கொண்டு வருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசுக்கு எதிராக டெல்லியை நோக்கி சென்ற விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சத்தீஸ்கரில் இந்திய ஒற்றுமை நீதிப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி அம்பிகாபூரில்  நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.

அப்போது,  நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசுவது ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல என்றார். விவசாயிகள் தங்களின் உழைப்பிற்கான பலன்களையே கேட்பதாக குறிப்பிட்ட அவர்,  வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது வழங்கிய  பாஜக அரசு, விவசாயிகளை வஞ்சிப்பதாக சாடினார். 

விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவதற்கான சட்டத்தை இயற்ற வலியுறுத்தும் சுவாமிநாதனின் பரிந்துரையை பாஜக அரசு செயல்படுத்த தயாராக இல்லை என்றும் குற்றம்சாட்டினார். வரும் மக்களைவை தேர்தலில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், சுவாமிநாதன் அறிக்கையில் குறிப்பிட்டதைப்போல், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டத்தை இயற்றுவோம் என உறுதியளித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow