அதிமுகவுடன் 3ம் கட்ட பேச்சுவார்த்தை - நினைத்ததை முடிக்குமா தேமுதிக?
வடசென்னை தொகுதிக்குப் பதிலாக வேறு தொகுதியை வழங்க வேண்டும் என தேமுதிக கோரிக்கை.
மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுக - தேமுதிக இடையே இழுபறி நீடித்து வரும் நிலையில், இன்று நடைபெறும் 3ம் கட்டப் பேச்சுவார்த்தையில் தொகுதிப்பங்கீடு இறுதி செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவைத் தேர்தல்தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் அதிமுக தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அந்த வகையில் இன்று தேமுதிகவுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக 3ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. தேமுதிக சார்பில் 4 மக்களவை தொகுதி மற்றும் 1 மாநிலங்களவை பதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் வடசென்னை, கள்ளக்குறிச்சி உட்பட 4 மக்களவை தொகுதிகளை மட்டும் வழங்க அதிமுக தயாராக உள்ளதாக தகவல் வெளியானது. அதேநேரம், வடசென்னை தொகுதிக்குப் பதிலாக வேறு தொகுதியை வழங்க வேண்டும் என தேமுதிக வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
2 கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எட்டப்படாத நிலையில் இன்று (மார்ச் 14) 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. அதிமுக பேச்சுவார்த்தைக் குழுவுடன் தேமுதிக பேச்சுவார்த்தை குழுவினர் மாலை 5 மணியளவில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதில், சுமூகமான முடிவு எட்டப்பட்டு தொகுதிப்பங்கீடு இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?