சிஏஏ-வை திரும்பப்பெற மாட்டோம் - அமல்படுத்த மாட்டோம் என மாநில அரசுகள் கூற உரிமையில்லை : அமித்ஷா செக்
எதிர்கட்சிகள் தங்கள் வாக்கு வங்கி அரசியலுக்காக சிஏஏ சட்டத்தை எதிர்க்கின்றன - அமித் ஷா
குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒருபோதும் திரும்ப பெற முடியாது என உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கடந்த 12ம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ANI செய்தி முகமைக்கு பேட்டியளித்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒருபோதும் திரும்ப பெற முடியாது என கூறியுள்ளார். இந்திய குடியுரிமையை உறுதி செய்வது இறையாண்மை உரிமை ஆகும். அதில் பாஜக தலைமையிலான அரசு ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்பு சிஏஏ சட்டம் திரும்ப பெறப்படும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்ததற்கு பதில் அளித்துள்ள அமித்ஷா, எதிர்கட்சிகள் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது என அவர்களுக்கே தெரிந்துள்ளதாக விமர்சித்தார். குடியுரிமை திருத்தச் சட்டம் நாட்டிற்கு ஏன் சாதமாக உள்ளது என நாங்கள் விளக்குவது போல், நாட்டிற்கு எதிரானது என்பதை ராகுல்காந்தி பொதுவெளியில் விளக்க வேண்டும் எனவும் அவர் சவால் விடுத்தார்.
குடியேற்றங்களால் நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீர்குலையும், கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்றவை அதிகரிக்கும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதற்கு கண்டனம் தெரிவித்த அமித்ஷா, ஆம் ஆத்மியின் ஊழல் வெளிப்பட்டதில் கெஜ்ரிவால் மனமுடைந்து கோபத்தில் பேசுகிறார் என விமர்சித்தார். புத்த மதத்தினர், சமணர்கள் மற்றும் பார்சிக்கள் ஆகிய சிறுபான்மையினருக்கு எதிராக கெஜ்ரிவால் குரலெழுப்புவதாகவும் இதற்கு டெல்லி தேர்தலில் அவர் அதிக சிரமங்களை எதிர்கொள்வார் எனவும் அமித்ஷா எச்சரித்தார்.
சிஏஏ சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என AIMIM கட்சித்தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்த குற்றச்சாட்டை மறுத்த அமித்ஷா, சிஏஏ சட்டம் எந்தவொரு குடிமகன் உரிமையையும் பறிக்கவில்லை என விளக்கம் அளித்தார். ஓவைசி, ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் பொய் அரசியல் செய்கின்றனர் எனவும் எதிர்கட்சிகள் தங்கள் வாக்கு வங்கி அரசியலுக்காக சிஏஏ சட்டத்தை எதிர்க்கின்றன என கடுமையாக குற்றம்சாட்டினார்.
தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் சிஏஏ சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என அம்மாநில அரசுகள் தெரிவித்தது குறித்தும் அவர் விளக்கமளித்தார். அப்போது அரசியலமைப்பின் 11வது பிரிவு குடியுரிமை தொடர்பான விதிகளை உருவாக்குவதற்கான அனைத்து அதிகாரங்களையும் நாடாளுமன்றத்திற்கு வழங்குகிறது எனவும் அவர் கூறினார். சிஏஏ சட்டம் மத்திய அரசின் கீழ் வருவதாகவும், இதனை அமல்படுத்த முடியாது எனக்கூற மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு பிறகு இந்திய குடியுரிமையை பெற நிறைய பேர் விரும்புவதாகக் கூறிய அவர், அதேநேரத்தில் எதிர்க்கட்சிகளின் தவறான பரப்புரையால் விண்ணப்பிக்க தயங்குவதாகவும் அவர் கூறினார். சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்திருந்தால் இனி உங்கள் மீது வழக்குகள் இருக்காது எனவும் சிஏஏ சட்டத்தைக் கண்டு சிறுபான்மையினர் அஞ்ச வேண்டாம் எனவும் அவர் கூறினார்.
What's Your Reaction?